தமிழ்நாடு

28 கி.மீ. தூரத்தை 12 மணி நேரத்தில் கடந்த சென்னை மாற்றுத்திறனாளி

Published On 2023-10-09 10:25 GMT   |   Update On 2023-10-09 10:25 GMT
  • காலை 11.30 மணிக்கு தனுஷ்கோடி அருகிலுள்ள அரிச்சல்முனை கடற்கரை பகுதியை வந்தடைந்தார்.
  • மகனை அவரது தாய் நிர்மலா கட்டியணைத்து உச்சி முகர்ந்து ஆனந்த கண்ணீர் மல்க வரவேற்றார்.

ராமேசுவரம்:

சென்னை திருவான்மியூரை சேர்ந்த சேர்ந்த பரத் மோகன்-நிர்மலா தேவி தம்பதியின் மகன் ஹரிஷ் (வயது 17). இவர் ஆட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி ஆவார். இருந்தபோதிலும் கல்வி, விளையாட்டு உள்ளிட்டவைகளில் மற்றவர்களை விட அதிக திறன் கொண்டவராக வலம் வந்தார்.

அதேபோல் ஹரிஷ் சிறுவயது முதலே நீச்சலில் கூடுதல் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இதனை அவரது பெற்றோர் சாதனை யாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதற்காக சிறு வயது முதல் நீச்சல் பயிற்சியை முறையாக கற்றுக் கொடுக்கத் தொடங்கி னர். அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது.

உள்ளூர் போட்டிகளில் மனதைரியத்துடன் பங்கேற்ற ஹரிஷ் ஏராளமான பரிசுகளை குவிக்க தொடங்கினார். இதையடுத்து கடலில் நீந்தி சாதனை படைக்க ஹரிஷை அவரது பெற்றோர் ஊக்கப்படுத்தினர். அதற்கான ஏற்பாடுகளையும், பயிற்சிகளையும் தொடர்ந்து ஹரிஷ் மேற்கொண்டார். சிறப்பு பயிற்சியாளர்களும் அவருக்கு உறுதுணையாக இருந்தனர்.

இதையடுத்து இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான அதிக கடல் நீரோட்டம் கொண்ட பாக்ஜலசந்தியை கடக்க முடிவு செய்த ஹரிஷ் தனது பெற்றோரிடம் கூறினார். அதனை ஏற்றுக் கொண்டு பச்சைக்கொடி காட்டிய பெற்றோர் அரசிடம் உரிய அனுமதியும் பெற்றனர்.

அதன்படி கடந்த 6-ந் தேதி ஹரிஷ் தனது தந்தை பரத்மோகன் மற்றும் 24 நீச்சல் வீரர்களுடன் ராமேசுவரத்தில் இருந்து இலங்கை சென்றனர். பின்னர் அன்று இரவு 11 மணிக்கு இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் குதித்து நீந்த தொடங்கிய ஹரிஷ் மறு நாள் (7-ந்தேதி) காலை 11.30 மணிக்கு தனுஷ்கோடி அருகிலுள்ள அரிச்சல்முனை கடற்கரை பகுதியை வந்தடைந்தார்.

28 கிலோமீட்டர் தொலைவை சுமார் 11 மணி நேரம் 52 வினாடிகளில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார். அரிச்சல் முனை வந்தடைந்த மகனை அவரது தாய் நிர்மலா கட்டியணைத்து உச்சி முகர்ந்து ஆனந்த கண்ணீர் மல்க வரவேற்றார்.

அப்போது சுங்கதுறை கண்காணிப்பாளர் சம்பத், கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் கனகராஜ் உள்ளிட்டோரும் இயலாமை என்பதை இயலும் என்று மாற்றிக்காட்டி சாதனை படைத்த ஹரிசை கைதட்டி வரவேற்று பாராட்டினர். இது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது.

Tags:    

Similar News