சொந்த வீடு உணர்வை ஏற்படுத்திய முதல்வருக்கு நன்றி- பயனாளிகள் நெகிழ்ச்சி
- அகதிகள் முகாமில் இருந்தபோது அடிப்படை வசதிகள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கும்.
- எங்களுக்கு எல்லாம் புதிய வீடு என்பது கனவு இல்லம்போல்தான் இருந்து வந்தது.
புதிய வீடு கிடைத்த அகதிகள் முகாமை சேர்ந்த சிவமலர் (வயது 35) என்பவர் தெரிவிக்கையில், நான் ஒரு வயதில் எனது பெற்றோருடன் தமிழகத்துக்கு வந்தேன். தற்போது எனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் முகாமில் பழுதடைந்த வீட்டில் வசித்து வந்தேன். மழைக்காலங்களில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீட்டிற்குள் வழிந்தோடும் நிலை இருந்தது. நமக்கும் புது வீடு கிடைக்கும் என்று கனவில்கூட நினைத்து பார்த்ததில்லை. எத்தனையோ முதல்வர்கள் ஆட்சியில் இருந்து வந்தாலும் எங்கள் நிலை குறித்து அறிந்து புதிய வீடு வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.
அகதிகள் வாழ்க்கையிலும் ஒளியேற்றி வைத்து எங்கள் குழந்தைகளை தலைநிமிரச் செய்து சமூகத்தில் ஒரு அங்கமாக உணர்த்திய முதல்-அமைச்சருக்கு காலம் முழுவதும் நன்றி கடன் செலுத்துவோம் என்றார்.
பயனாளி ஜோதிமலர் (30) என்பவர் தெரிவிக்கையில், எனது பெற்றோர் கடந்த 1990ம் ஆண்டு இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வந்தனர். நான்பிறந்ததே தமிழகத்தில்தான். தற்போது எனக்கு திருமணம் ஆகி கணவர் தேவதாஸ் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். அகதிகள் முகாமில் இருந்தபோது அடிப்படை வசதிகள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கும். நாங்கள் கேட்டாலும் அது பல சமயங்களில் கிடைக்காது. அப்போதுதான் நாங்கள் அகதிகள் என்ற உணர்வே ஏற்படும். எங்களுக்கு எல்லாம் புதிய வீடு என்பது கனவு இல்லம்போல்தான் இருந்து வந்தது. தற்போது எங்களுக்கும் வீடு வழங்கி சமுதாயத்தில் தலைநிமிர செய்த முதல்-அமைச்சருக்கு நன்றி.
என்னைப்போலவே இலங்கையில் இருந்து வந்த பெரும்பாலானோர் தற்போது புதிய வீட்டில் குடியேறி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும்போது அகதிகள் என்ற உணர்வே இல்லாமல் மறைந்து விட்டது என்றார்.