திருமங்கலம் அருகே ஓடும் ரெயில் மீது கல்வீச்சு- 2 பெண்கள் படுகாயம்
- கல்வீச்சில் காயமடைந்த 2 பெண்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி கல்வீசிய நபர்களை தேடி வருகின்றனர்.
திருமங்கலம்:
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து நேற்று (16-ந்தேதி) மாலை 6:15 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்னை நோக்கிச்சென்றது.
இந்த ரெயில் திருமங்கலம்-மதுரை இடையே மறவன்குளத்தை கடந்து வந்தபோது இரவு.9.20 மணியளவில் முன்பதிவு இல்லாத பெட்டிமீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் அந்த ரெயிலில் பயணம் செய்த தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த கலா (28) என்பவர் படுகாயம் அடைந்தார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 14-ந்தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் மீண்டும் சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றுள்ளார். அப்போது தென்காசி அய்யாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வி என்ற பெண்ணும் அவரது அருகில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.
இந்தநிலையில் மர்ம நபர்கள் வீசிய கற்கள் 2 பேர் மீதும் விழுந்தது. இதில் 2 பேரும் காயமடைந்தனர். இதில் கலாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கல்வீச்சில் பெண்கள் காயமடைந்ததை கண்ட பயணிகள் ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். இதைத்தொடர்ந்து ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆறுமுக பாண்டியன், தீபா ஆகியோர் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட கோச்சில் விசாரணை நடத்தினர்.
பின்னர் கல்வீச்சில் காயமடைந்த 2 பெண்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. காயமடைந்த 2 பெண்களும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கப்பலூர் டோல்கேட், மறவன்குளம் திருமங்கலம் ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு நடத்தினர். அந்த பகுதியில் யாரும் சிக்காத நிலையில் தொடர்ந்து கலாவின் சகோதரி முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் ரெயில்வே எஸ்.பி. செந்தில்குமார் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. பொன்னுச்சாமி தலைமையில் இன்ஸ்பெக்டர் குருசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் அருணோதயம், செல்லப்பாண்டி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கல்வீசிய நபர்களை தேடி வருகின்றனர்.
பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டி மீது கல்வீசி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 2 பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.