கள்ளக்காதலை மனைவியிடம் சொல்வேன் என மிரட்டியதால் கழுத்தை நெரித்து கொன்றேன்- சூப் கடைக்காரர் வாக்குமூலம்
- ஜெகதீஷ்வரியின் வீட்டிற்கு செல்வேன். அங்கு 2 பேரும் சந்தித்து, தனிமையில் ஜாலியாக இருப்போம்.
- போலீசார் மோகன்ராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
கோவை:
கோவை பீளமேடு சேரன்மாநகர், பாலாஜி நகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்வரி (வயது 40).
இவர் கடந்த மாதம் 28-ந் தேதி வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த 5 முக்கால் பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.
நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியது. இதில் தொடர்புடைய நபரை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜெகதீஷ்வரியின் வீட்டிற்குள் ஒரு நபர் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
அதனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வீட்டிற்குள் சென்று வந்த நபர், ராமநாதபுரம் கிருஷ்ணன் கோவில் பகுதியில் வசித்து வரும் மோகன்ராஜ் (வயது33) என்பதும், ரேஸ்கோர்சில் சூப் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மோகன்ராஜை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஜெகதீஷ்வரிக்கும், மோகன்ராஜூக்கும் கள்ளக்காதல் இருந்ததும், தகராறில் அவரை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார்.
போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தை உள்ளது. நான் கோவை ராமநாதபுரத்தில் தங்கி இருந்து ரேஸ்கோர்சில் சூப் கடை வைத்து நடத்தி வருகிறேன்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சேரன்மாநகர் பாலாஜி நகர் பகுதியில் வசித்தேன். அப்போது எனது வீட்டின் அருகே வசித்த ஜெகதீஷ்வரி என்பவரின் பழக்கம் கிடைத்தது. முதலில் நட்பாக பழகி வந்தோம். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதனால் எங்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது. அவரது மகள் பள்ளிக்கு சென்று விடுவார். கணவரும் வேலைக்கு சென்று விடுவார்.
அவர்கள் சென்ற பின்னர் நான், ஜெகதீஷ்வரியின் வீட்டிற்கு செல்வேன். அங்கு 2 பேரும் சந்தித்து, தனிமையில் ஜாலியாக இருப்போம். இது அப்படியே தொடர்ந்து வந்தது.
மேலும் செல்போனிலும் அடிக்கடி பேசி வந்தேன். நான் அடிக்கடி போனில் பேசுவதால் எனது மனைவிக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் என்னிடம் கேட்டபோதெல்லாம் நான் மழுப்பலாக பதில் அளித்து வந்தேன்.
இதனால் எங்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதனால் நான் வீட்டை மாற்றுவது என முடிவு செய்து சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் பகுதிக்கு வந்தேன்.
இங்கு வந்த பின்னரும் எங்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. நான் அடிக்கடி அங்கு சென்று அவரை சந்தித்து ஜாலியாக இருந்து வந்தேன்.
இதற்கிடையே நான் இங்கு வந்த பின்னர், ஜெகதீஷ்வரிக்கு வேறு பல ஆண்களுடனும் நட்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுடனும், அவர் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
இந்த தகவல் எனக்கு தெரியவந்ததும், நான் இதுகுறித்து அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் நான் எதுவும் சொல்வதையும் கேட்காமல் தொடர்ந்து அந்த நபர்களுடன் பழகி வந்தார்.
இதனால் எனக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. மேலும் என்னிடம் பணமும் கேட்டு வந்தார். நானும் அடிக்கடி கொடுத்து வந்தேன். தொடர்ந்து பணம் கேட்டு கொண்டே இருந்தால் என்னால் பணம் கொடுக்க முடியவில்லை. அதனால் அவர் நான் பணம் தராவிட்டால் உனது மனைவியிடம் கள்ளக்காதலை தெரிவித்து விடுவேன் என்றார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டுவதாலும், வேறு பல ஆண்களுடன் பழகியதாலும் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
அதன்படி சம்பவத்தன்று காலை ஜெகதீஷ்வரிக்கு போன் செய்து, நான் வீட்டிற்கு வர வா என கேட்டேன். அவரும் வா என அழைத்தார். இதையடுத்து நான் அவரது வீட்டிற்கு காலை 11 மணிக்கு சென்றேன். அங்கு அவரை சந்தித்து பேசி கொண்டு இருந்தேன்.
அப்போது எங்களுக்குள் இதுதொடர்பாக மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. ஏற்கனவே கொலை செய்யும் திட்டத்துடன் சென்றதால், எங்களுக்குள் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த நான் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.
பின்னர் 1 மணியளவில் அங்கிருந்து எனது வீட்டிற்கு சென்றுவிட்டேன். தொடர்ந்து கொலை நடந்ததை வெளியில் காட்டி கொள்ளாமல் எப்போதும் போல சகஜமாக எனது வேலைகளை செய்து வந்தேன். இதனால் என் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
மேலும் வழக்கை திசை திருப்பும் நோக்கத்தில் வீட்டில் இருந்த நகையை எடுத்து சென்றேன். மேலும் போலீசார் என்னை பிடித்து விடக்கூடாது என்பதற்காக 2 வாகனங்களிலும், நம்பர் பிளேட்டை மாற்றியும் பயணித்தேன். ஆனால் போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து, நான் அணிந்திருந்த சட்டையை வைத்து என்னை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் மோகன்ராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.