தமிழ்நாடு

3-வது நாளாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

Published On 2024-06-21 05:17 GMT   |   Update On 2024-06-21 05:17 GMT
  • நாள் ஒன்றுக்கு ரூ.8 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர்.
  • மீன்பிடி தொழிலை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ராமேசுவரம்:

தமிழகத்தில் கடலோர பகுதிகளில் நிலவும் நிலையற்ற வானிலை காரணமாக மன்னார்வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

குறிப்பாக மேற்கண்ட கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசக்கூடும் என்றும், எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனைதொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் பாதுகாப்பு கருதி மீன்பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்தனர். இந்த தடை மூன்றாவது நாளாக தொடருகிறது.

இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட துறைமுகங்களில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மீன்பிடி தடை காலம் முடிந்த நாளில் இருந்து பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.

மேலும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் முடங்கியுள்ளனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.8 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News