பள்ளி விடுதியில் தற்கொலை செய்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைப்பு
- இதுவரை மாணவி சரளாவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.
- மாணவி சரளா படித்த பள்ளியில் இன்று 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கீழச்சேரியில் சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு திருத்தணியை அடுத்த தெக்களூரை சேர்ந்த சரளா (வயது 17) என்பவர் பள்ளியின் விடுதியில் தங்கி 12 -ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை விடுதியில் உள்ள முதல் மாடி அறையில் மாணவி சரளா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா, மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மாணவி தற்கொலை பற்றி அறிந்ததும் பள்ளி விடுதி முன்பு அவரது உறவினர்கள் மற்றும் விடுதியில் தங்கி உள்ள மற்ற மாணவிகளின் பெற்றோர் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதேபோல் மாணவியின் சொந்த ஊரான தெக்களூரிலும் கிராம மக்களின் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மப்பேடு போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுப்படி இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு உடனடியாக மாற்றப்பட்டது. போலீசார் 3 பிரிவாக பிரிந்து மாணவியுடன் தங்கி இருந்தவர்கள் மற்றும் விடுதி நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுவரை மாணவி சரளாவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்தநிலையில் மாணவியின் உடல் வைக்கப்பட்டு இருந்த திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.
ஆஸ்பத்திரி டீன் அரசிவர்ஷன் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் நாராயண பாபு, பிரபு, வைரமாலா ஆகியோர் மாணவியின் அண்ணன் சரவணன் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தினர். இது முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. மாணவி உடல் பரிசோதனை நடந்ததையொட்டி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
வடக்கு மண்டல ஐ.ஜி.தேன்மொழி, ஆயுதப்படை ஐ.ஜி.கண்ணன் மேற்பார்வையில் காஞ்சிபுரம் சரக டி.ஏ.ஜி சத்திய பிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண், தலைமையில் கண்ணீர் புகைகுண்டு வீசும் வாகனத்துடன் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இதனால் ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் பதட்டமான நிலை நிலவியது. ஆஸ்பத்திரிக்குள் வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. விடுதலை சிறுத்தை கட்சியினர், புரட்சி பாரதம் கட்சியினர் ஏராளமானோர் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். ஆஸ்பத்திரி வளாகம் முழுவதையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருந்தனர்.
இதற்கிடையே காலை 10.30 மணியளவில் பிரேத பரிசோதனை முடிந்தது. 2½ மணிநேரம் மாணவி சரளாவின் உடலை டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து உள்ளனர்.
பிரேத பரிசோதனை முடிந்ததும் மாணவி சரளாவின் உடலை பெற்றுக்கொள்ளும்படி ஆஸ்பத்திரியில் இருந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் மாணவியின் சாவில் உள்ள மர்மம் மற்றும் இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைககள் குறித்து கேட்டு வாக்குவாதம் செய்தனர். மேலும் மாணவி சரளாவின் உடலை பெற்றுக் கொள்ள மறுத்தனர்.
இதையடுத்து அவர்களிடம் மதியம் 12.30 மணி வரை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மாணவி சரளாவின் உடலை பெற்றுக்கொள்ள சம்மதித்தனர். பின்னர் மாணவியின் உடல் அவரது அண்ணன் சரவணன் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதியம் 12.40 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது உடல் சொந்த ஊரான தெக்களூருக்கு ஆம்புலன்சு வேனில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாணவியின் உடல் நல்லடக்கம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தெக்களூரில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல் மாணவி சரளா படித்த பள்ளியிலும் இன்று 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இன்றும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. விடுதியில் தங்கி படித்த 80 மாணவிகள் அவர்களது பெற்றோரை வரவழைத்து வீட்டிற்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.
பள்ளி திறப்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கூறும்போது, நிதி உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தினர் பள்ளி திறப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, இன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் வழக்கின் தன்மையை பொறுத்து பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றனர். மாணவியின் கிராமமான தெக்களூரிலும் தொடர்ந்து பதட்டமான நிலை நீடித்து வருகிறது. அங்கும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். வெளி நபர்கள் கிராமத்துக்குள் வருவதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.