நீட் தேர்வில் வெற்றி பெற்றும் பணம் இல்லாததால் மருத்துவம் படிக்க முடியாமல் தவிக்கும் மாணவி
- மகளின் படிப்பு செலவுக்காக நந்தகுமார் தான் ஓட்டிவந்த ஆட்டோவை விற்று விட்டார்.
- பல் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சங்காரணை கிராமம், மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் நந்தகுமார். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு தமிழ்விழி, கனிமொழி என்ற 2 மகள்கள் உள்ளனர்.
இதில் தமிழ்விழி கன்னிகைப்பேர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து 419 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட தமிழ்விழி நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி ஆனார்.
ஆனால் அவருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. குமாரபாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் சேர இடம் கிடைத்தது. ஆனாலும் போதிய பணம் இல்லாததால் மாணவி தமிழ்விழி கல்லூரியில் சேரமுடியாமல் தவித்தார்.
இதைத்தொடர்ந்து மகளின் படிப்பு செலவுக்காக நந்தகுமார் தான் ஓட்டிவந்த ஆட்டோவை விற்று விட்டார். தற்போது அவர் கூலித்தொழிலாளியாக மாறி வேலைக்கு சென்று வருகிறார். அவரது மனைவியும் கூலி வேலை பார்த்து வருகிறார். ஆனாலும் மகளின் மருத்துவ கனவை எப்படியும் நிறைவேற்றிவிட வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாணவி தமிழ்விழி கூறும்போது, பல் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. ஆனால் படிக்க வைக்க பெற்றோரிடம் வசதி இல்லை. எனது படிப்பிற்காக தந்தை ஓட்டி வந்த ஆட்டோவையும் விற்று விட்டார். இப்போது பெற்றோர் கூலி தொழிலாளர்களாக உள்ளனர்.
அவர்களது வருமானம் வீட்டு செலவுக்கே போதுமானதாக இல்லை. எனினும் எனது கனவை அவர்கள் நிறைவேற்றி வருகின்றனர். கல்லூரியில் சேர உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றார்.