புதுச்சேரி
null

புதுச்சேரி-விழுப்புரம் 4 வழிச் சாலையில் பொதுமக்கள் திடீர் மறியல் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-11-27 05:08 GMT   |   Update On 2023-11-27 05:09 GMT
  • நெடுஞ்சாலை பணியாளர்கள் 2 சாலைகளின் குறுக்கே இரும்பு கேட்டுகள் அமைத்து ஒரு புறத்திலிருந்து மறுபுறம் நடந்து கூட செல்லாத அளவிற்கு தடுப்பு அமைத்துள்ளனர்.
  • போராட்டத்தினால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

மதகடிப்பட்டு:

விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக விழுப்புரம்-புதுச்சேரி வரை 90 சதவீத பணி நிறைவு பெற்றுவிட்டது.

இந்நிலையில் புதுச்சேரி மதகடிப்பட்டு 4 வழி சாலைக்கு அருகாமையில் தமிழக பகுதியான எல்.ஆர். பாளையம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இதற்கிடையே எல்.ஆர். பாளையம் வழியாகவே பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை விழுப்புரம்-புதுச்சேரி 4 வழி சாலையில் வந்து இணைகிறது.

இந்த சாலைக்கு எதிர் புறம் பிரபல மருத்துவக் கல்லூரி, கலைக்கல்லூரி, பள்ளி என அதிகமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. மாணவர்கள் இந்த சாலையை கடந்தே மறுமுனைக்கு செல்ல வேண்டும். மேலும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வோரும் இந்த சாலையை கடந்து செல்ல வேண்டும்.

ஆனால் நெடுஞ்சாலை பணியாளர்கள் 2 சாலைகளின் குறுக்கே இரும்பு கேட்டுகள் அமைத்து ஒரு புறத்திலிருந்து மறுபுறம் நடந்து கூட செல்லாத அளவிற்கு தடுப்பு அமைத்துள்ளனர்.

இதனால் எல்.ஆர். பாளையம் பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பொதுமக்களும் அப்பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுங்க சாவடியை கடந்து செல்ல வேண்டிய நிலைமை உள்ளது.

இதனை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் அதிகாரிகளிடம் பேசி சர்வீஸ் சாலையை அகலப்படுத்தி பாதை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தனர்.

இந்நிலையில் உறுதி அளித்தப்படி பாதை அமைத்து தராததால் மீண்டும் மறியல் போராட்டம் நடத்த போவதாக எல்.ஆர். பாளையம் பொதுமக்கள் அறிவித்தனர்.

அதன் படி இன்று எல்.ஆர். பாளையம் பொதுமக்கள் விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தினால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

Tags:    

Similar News