தமிழ்நாடு (Tamil Nadu)

தமிழகத்தில் பரவலாக கோடை மழை

Published On 2024-05-14 03:03 GMT   |   Update On 2024-05-14 03:03 GMT
  • முக்கூடல், பாப்பாக்குடி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, முத்தையாபுரம், பழையகாயல், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் பதிவானது. இந்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி நெல்லையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. மதியம் 1 மணி அளவில் பலத்த காற்று வீசியது. 1.30 மணிக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. பின்னர் சாரல் மழை போல் தூறியது.

இதனால் நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதேபோல் மாவட்டத்தில் ராதாபுரம், திசையன்விளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

இதேபோல் முக்கூடல், பாப்பாக்குடி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த மாடசாமி மனைவி ஆண்டாள் (வயது 60) என்பவர் அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். மழை காரணமாக சாலையோரத்தில் மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, ஆண்டாள் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அங்கு நின்ற 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. செங்கோட்டையில் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. சிவகிரி பகுதிகளிலும் மழை கொட்டித்தீர்த்தது. தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மாலையில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த மழையால் குற்றாலம் மெயின் அருவிக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதை அறிந்த சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, முத்தையாபுரம், பழையகாயல், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் திற்பரப்பு அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் குளுமையான சூழலுக்கு மாறியது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கோடை மழை வெளுத்து வாங்கியது. கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் கனமழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதேபோன்று, பொள்ளாச்சி, நீலகிரியிலும் பலத்த மழை பெய்தது.

Tags:    

Similar News