தமிழ்நாடு

காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தம்: சுப்ரீம்கோர்ட்டை அணுகி இடைக்கால தீர்வு காண வேண்டும்- ராமதாஸ்

Published On 2023-09-09 08:40 GMT   |   Update On 2023-09-09 08:40 GMT
  • சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 21-ம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
  • வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும்

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நேற்றுடன் நிறுத்திவிட்டது. காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காக்க வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

காவிரியில் தண்ணீர் திறந்து விட ஆணையிடக்கோரி, சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 21-ம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதுவரை காத்திருந்தால் குறுவை பருவ நெற்பயிர்கள் முற்றிலுமாக கருகிவிடும். எனவே, சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதியை அவசரமாக அணுகி, இந்த வழக்கில் 21-ந்தேதி விசாரணை தொடங்கும் வரை, இடைக்கால ஏற்பாடாக வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News