தமிழ்நாடு

தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் சூதாட்ட கிளப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்- முதலமைச்சருக்கு தமிழ்நாடு தெலுகு யுவசக்தி வலியுறுத்தல்

Published On 2022-12-23 09:39 GMT   |   Update On 2022-12-23 09:39 GMT
  • தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த சூதாட்ட மாபியா கும்பல்கள் தமிழகத்துக்குள் மீண்டும் புகுந்து சூதாட்ட விடுதிகளை நடத்தி வருகிறார்கள்.
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு சூதாட்ட கிளப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

சென்னை:

தமிழ்நாடு தெலுகு யுவசக்தி தலைவர் கே. ஜெகதீஸ்வர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ஆந்திராவை சேர்ந்த ஒருவர் சென்னையில் உள்ள ஒரு சூதாட்ட விடுதியில் மர்மமான முறையில் இறந்தார். தகவலறிந்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுத்து சென்னை மற்றும் தமிழகத்தில் செயல்பட்டு வந்த சூதாட்ட விடுதிகளுக்கு தடைவிதித்தார்.

தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் மீண்டும் சென்னையில் சூதாட்ட விடுதிகள் செயல்பட தொடங்கின. இது குறித்து நான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தேன். அதன் பேரில் முதல்வர் உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்து சென்னை தி. நகர், அண்ணாசாலை பகுதிகளில் செயல்பட்டு வந்த சூதாட்ட விடுதிகளுக்கு தடை விதித்தார். முதலமைச்சரின் அதிரடி நடவடிக்கைக்கு நான் கடிதம் எழுதி நன்றியும் பாராட்டும் தெரிவித்தேன்.

தற்போது தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் சூதாட்ட விடுதிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் அந்த மாநிலங்களைச் சேர்ந்த சூதாட்ட மாபியா கும்பல்கள் தமிழகத்துக்குள் மீண்டும் புகுந்து சூதாட்ட விடுதிகளை நடத்தி வருகிறார்கள்.

தமிழக - ஆந்திர எல்லையான சூலூர்பேட்டை பகுதியில் உள்ள ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் சூதாட்ட கிளப்புகளை இந்த கும்பல் நடத்தி வருகிறது. ஆந்திராவின் நெல்லூர், கடப்பா, திருப்பதி, பிரகாசம் மாவட்டங்களை சேர்ந்த இந்த மாபியா கும்பல்கள் தமிழக - ஆந்திர எல்லை பகுதியை சேர்ந்த அரசியல்வாதிகள், போலீசாரின் துணையுடன் சூதாட்ட விடுதிகளை நடத்தி வருகிறார்கள். இதனால் பாதிப்புக்குள்ளான அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் இந்த சூதாட்ட கிளப்புகளுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு சூதாட்ட கிளப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். பெண்கள் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News