40 தொகுதிகளிலும் வெற்றி: அமைச்சரவையில் மாற்றம் இல்லை
- ஒவ்வொரு அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் பயத்துடன் தேர்தல் பணியாற்றினார்கள்.
- தி.மு.க. வேட்பாளா வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அவர்களும் தேர்தல பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். எந்த தொகுதியிலாவது வெற்றி வாய்ப்பு இழந்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று தி.மு.க. தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கட்சிக் கூட்டங்களில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனால் ஒவ்வொரு அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் பயத்துடன் தேர்தல் பணியாற்றினார்கள். ஓட்டுப்பதிவு முடிந்த பிறகும் அவர்கள் மனதில் கவலை நீங்கவில்லை. சில அமைச்சர்கள் கோவில் கோவிலாக சென்றும் வழிபட்டனர். தேர்தலில் தோல்வி ஏற்பட்டு விடக் கூடாது. தி.மு.க. வேட்பாளா வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.
கடந்த 2 மாதமாக ஒரு வித அச்சத்தில்தான் சில அமைச்சர்கள் காணப்பட்டனர். இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கையில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோகமாக வெற்றி பெற்ற பிறகே ஒவ்வொருவர் மனதிலும் வழக்கமான உற்சாகம் காணப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அளவில்லா மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். இந்திய அரசியல் அரங்கில் அவர் கம்பீரமாக சென்று வரும் வகையில் 40-க்கு 40 வெற்றி கிடைத்துள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் பெருமைப்பட்டனர்.
இதனால் தமிழக அமைச்சர்கள் மாற்றம் இப்போதைக்கு கிடையாது என்று அறிவாலய வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருப்பதால் இப்போதைக்கு அமைச்சர்கள் யாரையும் மாற்ற வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தனர்.