பெண் காவலர்கள் குறித்து அவதூறு: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் கண்டனம்
- பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர்
- நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக பெண்கள் முழக்கமிட்டதால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது
தமிழக காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
யூ டியூபர் சவுக்கு சங்கரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக போலீசார் அழைத்து வந்தனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக பெண்கள் முழக்கமிட்டதால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசி கைதாகியுள்ள சவுக்கு சங்கருக்கு தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெண்ணுரிமை பெண் பாதுகாப்பு எனப் பெண்கள் நலனுக்காக வெயில் என்றும் பாராமல் மழை என்றும் பாராமல் புயல் என்றும் பாராமல் வெள்ளம் என்றும் பாராமல் கடுமையாக மக்கள் பணியாற்றும் நமது பெண் காவலர்களை மகளிர் காவல் துறையை குறித்து கேவலமாக பேசியதற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்
பல தடைகளையும் இன்னல்களையும் கடந்து பெண்கள் காவல்துறையில் பணியாற்றுவதை நாம் கொண்டாட வேண்டும், பெண்ணினத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் பாரதி கண்ட புதுமைப் பெண்களாக அவர்கள் பணியாற்றுவதை கண்டு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.
அதைவிடுத்து காவல்துறையில் உள்ள பெண்களையும் மூன்றாம் பாலினத்தவரையும், அருவருக்கத்தக்க விதமாக சவுக்கு சங்கர் அவர்கள் பேசியதை தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
பாரதி, அம்பேத்கர், பெரியார் போன்ற தத்துவார்த்த தலைவர்கள் கண்ட புதுமை பெண்கள் நாங்கள். சமூக மாற்றத்துக்கான ஒரு சீரிய சித்தாந்தத்தை முன்னெடுத்து அதன் வழியில் தங்கள் வாழ்க்கையை அரப்பணித்துக் கொண்டவர்கள் தமிழக காவல்துறையை சார்த்த மகளிர் காவலாளிகள். அவர்கள் பெண் என்பதினால் நீங்கள் எதை வேண்டுமென்றாலும் பேசி விட முடியாது. எங்கள் பெண்களின் சுயமரியாதைக்கு ஒரு இழுக்கு என்றால் அதற்கு எதிராக தமிழக மகளிர் காங்கிரஸ் தெருவில் இறங்கிப் போராட தயாராக உள்ளோம்.
பெண்ணினத்தை போற்ற கண்ணியத்தை அளவுகோலாக வைத்து எடைபோடுங்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.