தூத்துக்குடி தெர்மல்நகர் அனல் மின்நிலையத்தில் காப்பர் குழாய் திருடிய 10 பேர் கைது
- 15-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து 8 நாட்களாக கடலில் படகு மூலம் வந்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
- 5 அனல் மின்நிலைய ஊழியர்களை நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெர்மல்நகர் அனல் மின் நிலையத்தில் காப்பர் குழாய் மற்றும் டியூப்புகள் திருட்டு போனது. இது குறித்து தெர்மல்நகர் அனல் மின்நிலைய பண்டக சாலை கட்டுப்பாட்டு அலுவலர் சுப்பிரமணி, தெர்மல்நகர் போலீசில் புகார் செய்தார்.
அதில் பண்டகசாலை இ-மற்றும் கே-ஆகிய பிரிவுகளில் அனல் மின்நிலையத்திற்கு தேவையான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.
அதனை சரி பார்க்கும் போது அங்கு வைக்கப்பட்டிருந்த 690 கிலோ காப்பர் குழாய்கள் மற்றும் 834 காப்பர் டியூப்புகள் திருட்டு போய் இருப்பது தெரிய வந்துள்ளது என கூறி யிருந்தார்.
இது குறித்து தெர்மல்நகர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக தூத்துக்குடி நகர டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையிலான தனிப்பட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் 15-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து 8 நாட்களாக கடலில் படகு மூலம் வந்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட தூத்துக்குடியை சேர்ந்த ஜெயபிரேம்சிங், மாசாணமுத்து, மதன், பிரகாஷ், சுப்பிரமணி, குழந்தைபாண்டி, கணேசமூர்த்தி, அழகர், சந்தனராஜ், மாரிமுத்து ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில் அனல் மின் நிலையத்தில் பணியின் போது கவன குறைவாக இருந்ததாக 5 அனல் மின்நிலைய ஊழியர்களை நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.
திருட்டு சம்பந்தமாக புகார் அளித்த சில நாட்களிலே தீவிரமாக செயல்பட்டு குற்ற செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசாரை உயர் காவல்துறை அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டினர்.