நூற்பாலைகள் வேலைநிறுத்தத்தால் 3 நாளில் ரூ.350 கோடி வருவாய் இழப்பு
- தமிழகத்தில் பஞ்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
- தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட பஞ்சாலைகள் உள்ளன.
கோவை:
தமிழகத்தில் சிறு-குறு நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு நூல் பொருட்கள் தயார் செய்யப்பட்டு ஆடை நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதற்கிடையே நூற்பாலைகளுக்கான மூலப்பொருட்களின் விலையை மத்திய அரசு அதிகரித்தது. இன்னொருபுறம் மாநில அரசு மின்கட்டண உயர்வை அமல்படுத்தியது. இதனால் பஞ்சு மில்கள் செலவை சமாளிக்க முடியாமல் திணறின.
இந்த நிலையில் தமிழகத்தில் பஞ்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், துணிகள் ஏற்றுமதிக்கான வரியை குறைக்க வேண்டும், வெளிநாட்டில் இருந்து ஆடைகள் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த வேண்டும், வங்கிகளில் கடன்வட்டி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பஞ்சாலைகள் கடந்த வாரம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தன.
எனவே அவர்களுடன் மத்திய-மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் உடன்பாடு எட்டப்பட வில்லை.
இதனை தொடர்ந்து கோவை, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் சிறு, குறு நூற்பாலைகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கின. அவர்களின் போராட்டம் தற்போது 3-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட பஞ்சாலைகள் உள்ளன. இங்கு சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அங்கு தினமும் சுமார் 35 லட்சம் கிலோ நூல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் தமிழக பஞ்சாலைகளின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, அங்கு வேலை பார்த்த 1.5 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டு உள்ளது. இன்னொருபுறம் பஞ்சாலைகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை பார்த்து வந்த சுமார் 10 லட்சம் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகம் முழுவதும் பஞ்சாலைகளின் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக, கடந்த 3 நாளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் டன் நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு ரூ.350 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாலை நிறுவனங்களுடன் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.