தமிழ்நாடு (Tamil Nadu)

புதுவையில் காய்ச்சலுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 150 குழந்தைகள் அனுமதி

Published On 2022-09-17 06:30 GMT   |   Update On 2022-09-17 09:06 GMT
  • குழந்தைகளின் சுவாசம் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் காய்ச்சல் பரவுகிறது.
  • வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவையில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.

வைரஸ் காய்ச்சலால் அனைத்து பள்ளி குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடும் உடல் வலி, சளி, தொண்டை அலர்ஜி, தலைக்கணம் ஆகியவை ஏற்படுகிறது.

தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகளில் வெளிப்புற சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தைகளின் சுவாசம் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் காய்ச்சல் பரவுகிறது.

பள்ளி மாணவர்களிடையே அதிகளவு காய்ச்சல் பரவுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் வீட்டில் இருந்தபடி முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் வைரஸ் காய்ச்சலை தடுக்க முடியும் என சுகாதாரதுறை அறிவுருத்தியுள்ளது.

மேலும், சுகாதாரதுறையின் பரிந்துரையின் அடிப்படையில் புதுவை, காரைக்காலில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் 25-ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 26-ந் தேதி முதல் அரசு பள்ளிகளில் காலாண்டு தேர்வு தொடங்க உள்ளது.

புதுவை சுகாதாரதுறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-

வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனை, அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை உட்பட அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்கு தனி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இங்கு படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப கூடுதல் படுக்கை வசதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் புதுவை மற்றும் காரைக்காலில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெளிப்புற சிகிச்சைக்கு டாக்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். அந்த வகையில் நேற்று காய்ச்சலுக்கு 190 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இன்று 150 குழந்தைகளும் 30 பெரியவர்களும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என்றாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாளை அல்லது நாளை மறுநாள் இவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்புவார்கள்.

இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார்.

இதற்கிடையே வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News