தமிழ்நாடு

சேலம் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் திடீர் நீக்கம்- கட்சி தலைமை அதிரடி நடவடிக்கை

Published On 2023-06-28 05:37 GMT   |   Update On 2023-06-28 05:37 GMT
  • சேலம் மாநகரில் தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ள சம்பவம் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • ஏற்கனவே பகுதிச் செயலாளராக இருந்த சர்க்கரை சரவணன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

சேலம்:

தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த 10-ந்தேதி சேலம் வந்தார். அப்போது தி.மு.க நிர்வாகிகள் கூட்டம், 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது.

இதில் நிர்வாகிகள் பலர் மனு கொடுத்தனர். அப்போது தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி கவுன்சிலருமான ஜெயக்குமார், மாவட்ட நிர்வாகிகள் குறித்து முதலமைச்சரிடம் கொடுத்த புகார் மனு சமூக வலைதளங்களில் பரவியது.

அதேபோல் மற்றொரு தி.மு.க. கவுன்சிலர் சக்கரை சரவணன் மத்திய மாவட்ட செயலாளருக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டார். இது கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தி.மு.க தலைமைக்கு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கவுன்சிலர்கள் சக்கரை ஆ.சரவணன், ஜெயக்குமார் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக தி.மு.க பொதுசெயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சேலம் மாநகரில் தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ள சம்பவம் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பகுதிச் செயலாளராக இருந்த சர்க்கரை சரவணன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது கட்சியில் எந்த பதவியும் இல்லாத நிலையில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார்.

ஜெயக்குமார் மாநகர செயலாளராக இருந்த நிலையில் அதிலிருந்து நீக்கப்பட்டு, கடந்த ஆண்டு தலைமை செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயக்குமார் மாநகராட்சியில் ஆளும்கட்சி தலைவர் பதவி வகித்து வருகிறார். தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அந்த பதவிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News