ஆந்திராவில் இருந்து உசிலம்பட்டிக்கு சரக்கு வேனில் கடத்திய 40 கிலோ கஞ்சா பறிமுதல்- 4 பேர் கைது
- கடத்தலுக்கு பயன்படுத்திய மினி சரக்கு வேனையும் பறிமுதல் செய்து உசிலம்பட்டி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தினர்.
உசிலம்பட்டி:
தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்தநிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் மார்நாடு கருப்பசாமி கோவில் அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மினி சரக்கு வேனை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த வேனில் 40 கிலோ கஞ்சாவை கடத்தி வந்திருந்தது கண்டறியப்பட்டது.
அதனை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் இந்த கடத்தல் தொடர்பாக வருசநாடு அருகே உள்ள கும்மணந்தொழுவை சேர்ந்த செல்வேந்திரன், பாப்பிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த பாண்டியன், திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த வீரமணி மற்றும் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த சங்கர மையிலா என்ற பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி சரக்கு வேனையும் பறிமுதல் செய்து உசிலம்பட்டி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தினர்.
இதில் கும்மணந்தொழுவைச் சேர்ந்த செல்வேந்திரன், பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்ற இருவரும் கோவை 110 பட்டாலியன் பிரிவில் பிராந்திய ராணுவ படை வீரர்களாக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.
மேலும் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த சங்கரமையிலா 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆந்திராவில் வசித்து வருவதாகவும், அவர் மூலம் கஞ்சாவை ஆந்திராவிலிருந்து வாங்கி வந்து உசிலம்பட்டி பகுதியில் வைத்து பிரித்து எடுத்து செல்ல முயன்றபோது பிடிபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.