திருமங்கலத்தில் சித்த மருந்து தயாரிக்கும் தொழிலதிபர் வீட்டில் 51 பவுன் நகைகள் கொள்ளை
- வேலாயுதம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அருகில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த குதிரை சாரிகுளம் பகுதியில் உள்ள ஜெயண்ட் விலாஸ் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 54). இவர் சித்த மருந்து தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலாயுதம் தொழில் நிமித்தம் காரணமாக திருப்பூர் சென்று விட்டார். மனைவி தனலட்சுமி, மகன் கீர்த்தி வாசனுடன் சென்னையில் சித்தா படிக்கும் தன்னுடைய மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று நள்ளிரவு அங்கு வந்து வீட்டின் முன்பக்க கதவை உடைத்தனர். பின்னர் வீட்டுக்குள் புகுந்த அவர்கள் படுக்கை அறைக்கு சென்று அங்கிருந்த பீரோவையும், மாடியில் இருந்த பீரோவையும் உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 51 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
மறுநாள் காலை வேலாயுதம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அருகில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுபற்றி அக்கம்பக்கத்தினர் வேலாயுதத்திற்கு தகவல் கொடுத்தனர். வேலாயுதம் வந்து பார்த்தபோது தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் வேலாயுதம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள வீடுகளில் அடிக்கடி கொள்ளை சம்பவம் அரங்கேறி வருவதால் போலீசார் இப்பகுதியில் ரோந்து செல்ல வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.