தமிழகத்தில் 6 லட்சம் லாரிகள் நாளை ஓடாது: ஆம்னி பஸ்கள், இலகுரக வாகனங்களும் பங்கேற்பு
- லாரிகள் உள்பட இலகு ரக வாகனங்களுக்கு காலாண்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாளில் பல ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கும், பல ஆயிரம் டன் பொருட்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம்:
தமிழகத்தில் 6 லட்சம் லாரிகள், 25 லட்சம் இலகு ரக வாகனங்கள் உள்ளன. இதில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் வட மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன.
வடமாநிலங்களில் இருந்து வெங்காயம், பருப்பு, துணி வகைகள், மளிகை பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இதே போல தமிழகத்தில் இருந்து ஜவ்வரிசி, கல்மாவு, துணி வகைகள், இரும்பு தளவாடங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
லாரிகள் உள்பட இலகு ரக வாகனங்களுக்கு காலாண்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் வாகனங்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. டீசல் விலை, உதிரி பாகங்கள் விலை உயர்வு, காப்பீட்டு கட்டண உயர்வு, லாரிகளுக்கு சரக்குகள் கிடைக்காமை உள்பட பல்வேறு காரணங்களால் லாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வரிகளால் தொழில் மேலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் மற்றும் இலகு ரக வாகன உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் நாளை (9-ந்தேதி) ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் லாரிகள், இலகு ரக வாகனங்கள், ஆம்னி பஸ்கள் ஓடாது. இதனால் தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாளில் பல ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கும், பல ஆயிரம் டன் பொருட்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் டிரைவர்கள், கிளீனர்கள், தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறியதாவது:-
வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வழக்குப்பதிவை ரத்து செய்ய வேண்டும், அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை(9-ந் தேதி) தமிழகம் முழுவதும் லாரிகள், ஆம்னி பஸ்கள், இலகு ரக வாகனங்களை நிறுத்தி வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
இதனால் தமிழகத்தில் 6 லட்சம் லாரிகள், 25 லட்சம் இலகு ரக வாகனங்கள் இயங்காது, தமிழக அரசு இதுவரை எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. மாநில அரசுக்கு எங்களது கோரிக்கையை தெரிவிக்கும் வகையில் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
சுங்க கட்டணம் அதிகரிப்பு, டீசல் விலை உயர்வால் லாரி தொழிலை நடத்த முடியாத நிலை உள்ளது. தமிழக அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் பொதுக்குழு கூடி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்வோம்.
ஆந்திரா, கேரளா, கர்நாடகம், தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை அந்தந்த மாநில எல்லைகளில் நிறுத்தி வைக்க கேட்டுள்ளோம், அதே போல தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு லாரிகள் இயக்கப்படாது.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக ஒரே நாளில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கும். லாரி உரிமையாளர்களுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்படும். அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, கியாஸ் சிலிண்டர் லாரிகள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினர்.