10 கிராம மீனவர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்- 2 மாவட்ட மீனவர்களிடையே இன்று பேச்சுவார்த்தை
- கடந்த 1-ந் தேதி இடிந்த கரையை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்.
- பஞ்சள், தோமையார்புரம் உள்ளிட்ட 10 கிராம மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் பாரம்பரிய முறையில் மீன்பிடித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதி விசைப்படகு மீனவர்கள் நெல்லை மாவட்ட கடல் பகுதியில் மீன்பிடித்து செல்வதாகவும், அப்போது நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடி வலைகளும், மீன்பிடி உபகரணங்கள், படகுகள் சேதம் அடைவதாக புகார் எழுந்து வந்தது.
கடந்த 1-ந் தேதி இடிந்த கரையை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இடிந்தகரை நாட்டுப் படகு மீது மோதியதில் 2 மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் நாட்டுப் படகு மீது மோதிய விசைப்படகு மீனவர்களை கைது செய்ய வேண்டும், விசைப்படகின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூத்தன்குழி, பஞ்சள், தோமையார்புரம் உள்ளிட்ட 10 கிராம மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களிடையே மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் வள்ளியூரில் இன்று பேச்சவார்த்தை நடைபெறுகிறது.