தமிழ்நாடு

கொள்ளை நடந்த வீட்டில் போலீசார் விசாரணை மேற்கொண்ட காட்சி.

கோபிசெட்டிபாளையம் அருகே ஓய்வுபெற்ற பேராசிரியர் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை

Published On 2023-10-25 03:57 GMT   |   Update On 2023-10-25 03:57 GMT
  • கொள்ளையர்கள் நகையை கொள்ளை அடித்து வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து தப்பி சென்றுள்ளனர்.
  • வீட்டை பற்றி நன்கு தெரிந்த நபர்கள் தான் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரை சேர்ந்தவர் அர்ச்சுனன் (61). இவர் கோபியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வுபெற்றார்.

இவரது மனைவி சபிதா. இவர்களது மகள் தீபிகா. கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக பணியாற்றி வருகிறார். தீபிகாவிற்கு வரன் பார்த்து அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக 100 பவுன் நகையை அர்ச்சுனன் வாங்கி வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார்.

மகள் திருமணம் என்பதால் கடந்த ஒரு மாத காலமாக வீட்டில் பெயிண்டிங் மற்றும் மராமத்து பணிகள் நடைபெற்று வந்தது. இதில் சில பணியாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை தீபிகா வழக்கம் போல் மருத்துவமனைக்கு வேலைக்காக சென்று விட்டார். அர்ச்சுனனும், அவரது மனைவி சபிதாவும் அந்தியூரில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பி உள்ளனர். வீட்டின் முன் பக்க கதவை திறந்து அர்ச்சுனன் மற்றும் அவரது மனைவி வீட்டுக்குள்ளே சென்றனர்.

அப்போது வீட்டில் சமையல் அறையில் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அர்ச்சுனன் வீட்டில் இருந்த பீரோ இருந்த அறைக்கு சென்று பார்த்தார்.

அப்போது பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இதேபோல் மேல் அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 2 பீரோக்களிலும் இருந்த 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து அர்ச்சுனன் கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். நள்ளிரவு 12 மணியளவில் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

போலீசார் வீட்டின் பின்பகுதியில் சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் பின்பக்க காம்பவுண்ட் சுவர் அருகே ஒரு பேக் இருப்பது தெரியவந்தது. அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் 30 பவுன் நகை இருந்தது தெரியவந்தது.

கொள்ளையர்கள் நகையை கொள்ளை அடித்து வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து தப்பி சென்றுள்ளனர். அப்போது காம்பவுண்ட் சுவரை தாண்டி குதிக்கும் போது கொள்ளையடிக்கப்பட்ட ஒரு பேக் தவறி வீட்டுக்குள் விழுந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டை பற்றி நன்கு தெரிந்த நபர்கள் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் மற்றும் கொள்ளை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News