தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்காட்சியை தொடங்கி வைக்கும் நடிகர் சத்யராஜ்

Published On 2023-04-07 06:09 GMT   |   Update On 2023-04-07 06:09 GMT
  • இன்றைய இளம் தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரிய புகைப்படங்களும் கண்காட்சியில் இடம் பிடித்துள்ளன.
  • திராவிட இயக்கத்தின் வரலாறு மற்றும் கோவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள சிறப்பான திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெற உள்ளது.

கோவை:

கோவை வ.உ.சி மைதானத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால சரித்திர வரலாற்று புகைப்பட கண்காட்சி நடக்கிறது. இன்று தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை இந்த கண்காட்சி நடக்க உள்ளது.

கண்காட்சியின் தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைக்கிறார். பின்னர் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை பார்வையிடுகிறார். இந்த கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்மந்தப்பட்ட இதுவரை யாரும் பார்த்திராத பல அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அவர் 70 ஆண்டு கால பொது வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள், எதிர்கொண்ட துயரங்கள் ஆகியவற்றை இன்றைய இளம் தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரிய புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் இடம் பிடித்துள்ளன.

திராவிட இயக்கத்தின் வரலாறு மற்றும் கோவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள சிறப்பான திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெற உள்ளது.

இந்த கண்காட்சி தினந்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. இந்த கண்காட்சியை காண அனைவருக்கும் இலவச அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் வந்து கண்காட்சியை பார்வையிட்டு, திராவிட இயக்கத்தின் வரலாறு, மு.க.ஸ்டாலின் சந்தித்த போராட்டங்கள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று விடுமுறை நாள் என்பதால் இந்த கண்காட்சியை காண ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News