தமிழ்நாடு

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை நாளை தொடக்கம்

Published On 2022-08-22 06:02 GMT   |   Update On 2022-08-22 07:16 GMT
  • எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது
  • நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்தது.

சென்னை:

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11-ந் தேதி சென்னையில் நடந்தது.

அந்த கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கட்சி விதிகளில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன.

ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அந்த பொதுக்குழுவில் ஏகமனதாக சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு செய்தார்.

சென்னை ஐகோர்ட்டில் சமீபத்தில் அந்த மேல் முறையீடு மனு விசாரணைக்கு வந்த போது, "ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது" என்று நீதிபதி அறிவித்தார். மேலும் ஜூன் 23-ந்தேதிக்கு முந்தைய நிலையே அ.தி.மு.க.வில் நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் நீதிபதி தனது உத்தரவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி பொதுக்குழுவை கூட்ட முடியாது. எனவே மீண்டும் இருவரும் சேர்ந்து கூட்டலாம் என்று நீதிபதி கூறி இருந்தார்.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவு ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. அவர்கள் மீண்டும் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் சமரச முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆனால் இந்த சமரச முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்து உள்ளார். தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த விசாரணை நடந்தது.

இந்த மேல் முறையீட்டு வழக்கில் தங்களை கேட்காமல் தீர்ப்பளிக்க கூடாது என்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் ஏற்கனவே மனு செய்திருந்தனர். இதனால் இன்றைய வழக்கு விசாரணையின் போது ஓ.பன்னீர் செல்வம் அணி வக்கீல்களும் ஆஜரானார்கள்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு நாளை பட்டியலிடப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். எனவே நாளை முதல் விசாரணை நடைபெறும்.

Tags:    

Similar News