தமிழ்நாடு

9-ந்தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல்: இரட்டை இலை சின்னம் முடக்கத்தால் அ.தி.மு.க.வினர் கலக்கம்

Published On 2022-06-30 06:28 GMT   |   Update On 2022-06-30 07:19 GMT
  • ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 510 பதவி இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
  • இதில் 40 ஊராட்சி தலைவர், 436 கிராம வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கட்சி சார்ந்த சின்னங்கள் ஒதுக்கப்படுவது இல்லை.

சென்னை:

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

இந்த நிலையில் இருவரும் கையெழுத்திட்ட படிவம் வழங்கப்படாததால் 9-ந்தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட 34 பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடுபவர்களுக்கு அவர்களது சின்னங்கள் ஒதுக்கப்படும். அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் இந்த பதவிகளுக்காக போட்டியிடும் நிர்வாகிகளுக்கு பார்ம் ஏ மற்றும் பார்ம் பி.யில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து போட வேண்டும்.

தற்போது அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இருவரும் கையெழுத்திட்ட படிவங்கள் அ.தி.மு.க.வினருக்கு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் சுயேட்சையாக போட்டியிடுகிறார்கள்.

இதன் காரணமாக அ.தி.மு.க.வினர் கலக்கம் அடைந்துள்ளனர். எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தால் ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் உள்ளாட்சி தேர்தல் இடைத்தேர்தலில் களம் கண்டிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்று அ.தி.மு.க.வினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் சுயேட்சையாக போட்டியிடுவதால் புதிய சின்னங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது சிரமமான விஷயமாகவே மாறி உள்ளது என்றும், இதனால் வெற்றி வாய்ப்பு பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ள அ.தி.மு.க.வினர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 510 பதவி இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதில் 40 ஊராட்சி தலைவர், 436 கிராம வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கட்சி சார்ந்த சின்னங்கள் ஒதுக்கப்படுவது இல்லை. இதனால் இந்த பதவி இடங்களுக்கான போட்டியில் சின்னம் தொடர்பான பிரச்சினை எழவில்லை.

Tags:    

Similar News