பஸ் படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள்- டிரைவர், கண்டக்டரை எச்சரித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.
- பெருந்துறை பகுதியில் இன்று காலை போலீசார் பல்வேறு இடங்களில் பஸ்களில் யாராவது படிகளில் நின்று பயணம் செய்கிறார்களா? என்று தீவிரமாக கண்காணித்தனர்.
- படிக்கட்டுகளில் பயணம் செய்ய அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஸ் டிரைவர், கண்டக்டர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
பெருந்துறை:
திருப்பூரில் இருந்து தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் விஜயமங்கலத்தில் இருந்து பெருந்துறை நோக்கி வந்த போது பஸ்சின் பின்புறமாக பெருந்துறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயக்குமார் தனது காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த பஸ்சின் பின்புற படிக்கட்டில் கல்லூரி மாணவர்கள் சிலர் நின்று கொண்டு தொங்கியபடி, ஆபத்தான முறையில் பயணித்ததை கண்டார். இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமார் எம்.எல்.ஏ. அந்த பஸ்சை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே தடுத்து நிறுத்தினார்.
இதைத்தொடர்ந்து அந்த பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டரை அழைத்து அவர் அறிவுரை கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் 'படிக்கட்டுகளில் நின்று தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்களை, ஏன் பஸ்சில் ஏற அனுமதித்தீர்கள்? திருப்பங்களில், பஸ்சில் தொங்கி கொண்டு வரும் மாணவர்களின் கால்கள், ரோட்டில் உரசியபடி வருவது, உங்களுக்கு தெரியுமா? பொறுப்பற்ற முறையில், நீங்கள் தொடர்ந்து மாணவர்களை பஸ்சில் பயணம் செய்ய அனுமதித்தால், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் பரிந்துரை செய்வேன்,' என எச்சரிக்கை விடுத்தார். மேலும் பெற்றோர் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். எனவே அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லுங்கள் என்றார்.
இதையடுத்து, பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் அனைவரும், பஸ்சின் உட்புறத்திற்கு சென்றனர். பின்னர் அந்த பஸ் ஈரோட்டை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் பெருந்துறை பகுதியில் இன்று காலை போலீசார் பல்வேறு இடங்களில் பஸ்களில் யாராவது படிகளில் நின்று பயணம் செய்கிறார்களா? என்று தீவிரமாக கண்காணித்தனர். மேலும் படிக்கட்டுகளில் பயணம் செய்ய அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஸ் டிரைவர், கண்டக்டர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.