தமிழ்நாடு (Tamil Nadu)

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு- எடப்பாடி பழனிசாமி கடிதம்

Published On 2023-01-14 07:43 GMT   |   Update On 2023-01-14 10:41 GMT
  • அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி இந்திய சட்ட ஆணையத்திற்கு ஆன்லைன் வழியாக பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
  • பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்து உள்ள நிலையில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் தேசிய சட்ட ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்படி பொதுமக்கள், அரசியல் கட்சியினர்களிடம் சட்ட ஆணையம் கருத்து கேட்டு வருகிறது. அந்த வகையில் அரசியல் கட்சிகளுக்கு இந்திய சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியது.

ஜனவரி 16-ந்தேதிக்குள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கும்படி அரசியல் கட்சிகளுக்கு சட்ட ஆணையம் தெரிவித்து இருந்தது.

சட்ட ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான ரிதுராஜ் அவஸ்தி எடப்பாடி பழனிசாமிக்கு என்று குறிப்பிட்டு கடிதம் அனுப்பி இருந்தார். ஆன்லைன் முறையில் 30 நாட்களுக்குள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி இந்திய சட்ட ஆணையத்திற்கு ஆன்லைன் வழியாக பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்து உள்ள நிலையில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் அடிக்கடி தேர்தல் நடப்பதால் அதிக செலவினம் ஏற்படுவதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், அத்தியாவசிய சேவைகள் தடைபடுவதாகவும் ஆகையால் பாராளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற தேர்தலையும் ஒரு சேர நடத்துவது தொடர்பாக சட்டக்குழு ஆலோசனை செய்வதாக மத்திய சட்டத்துறை மந்திரி தெரிவித்தார்.

இது தொடர்பாக பாராளுமன்ற குழு ஆய்வு மேற்கொண்ட சில பரிந்துரைகளையும் அளித்துள்ளது. இதுகுறித்து சட்ட ஆணையம் தான் முடிவு செய்யும்.

Tags:    

Similar News