2 தனியார் பஸ்களின் கண்ணாடிகளை உடைத்த கும்பல்- கண்டக்டர் காயம்
- தனியார் பஸ்சின் கண்ணாடியையும் உடைத்துவிட்டு அந்த கும்பல் தப்பிச்சென்றது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து சங்கரன்கோவிலுக்கு வீ.கே.புதூர் வழியாகவும், அகரம் வழியாகவும் 2 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று மதியம் ஆலங்குளத்தில் இருந்து வீ.கே.புதூர் வழியாக செல்லும் பஸ்சில் ஒரு பெண்ணை ஏற்றி விட்டு அகரம் வழியாக செல்ல வேண்டும் என்று ஒரு நபர் கூறியுள்ளார். ஆனால் அந்த பஸ் அந்த வழியாக செல்லாது என கண்டக்டர் தெரிவித்தவுடன் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே பஸ் பயணிகள் சமாதானம் செய்து 2 பேரையும் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மாலையில் அந்த பஸ் சங்கரன்கோவிலுக்கு சென்றபோது வீராணம் பஸ் நிறுத்தத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் சேர்ந்து அதனை மறித்து பஸ் கண்ணாடியை அரிவாளால் உடைத்து பயணிகளை மிரட்டி தப்பி சென்றனர்.
அப்போது எதிரே ஆலங்குளம் நோக்கி வந்த மற்றொரு தனியார் பஸ்சின் கண்ணாடியையும் உடைத்துவிட்டு அந்த கும்பல் தப்பிச்சென்றது. இதில் கண்டக்டர் மகேஷ்குமாருக்கு(வயது 37) தலையில் காயம் ஏற்பட்டது. அவர் வீ.கே.புதூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பகலில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் தனது கூட்டாளிகளுடன் வந்து பஸ் கண்ணாடியை உடைத்து இருக்கலாமா என்ற கோணத்தில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.