தமிழ்நாடு

மீனவர்களை மீட்க கடிதம் எழுதினால் முதலமைச்சரின் கடமை முடிந்து விடுமா? அன்புமணி ராமதாஸ் கேள்வி

Published On 2024-09-08 06:34 GMT   |   Update On 2024-09-08 06:34 GMT
  • மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காணும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது.
  • மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விரைவாக தீர்வு காண செய்யும் பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு.

சென்னை :

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து சென்று வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை சிங்கள கடற்படையினர் கைது செய்து காங்கேசன் துறை சிறையில் அடைத்திருக்கின்றனர்.

தற்போது 134 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்துக் கொண்டிருக்கின்றன. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 187 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காணும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது. என்றாலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விரைவாக தீர்வு காண செய்யும் பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், தயாராக எழுதி வைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில், கைது செய்யப்படும் மீனவர்களின் எண்ணிக்கையை மட்டும் மாற்றி கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்புவதுடன் தமது கடமை முடிந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டு மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News