அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கு- போலீசிடம் சத்தியம் வாங்கிய கொள்ளையன்
- சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட கொள்ளை வழக்கில் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் சிக்கியது எப்படி என்பது பற்றி போலீசில் பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
- அனைத்தும் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது.
சென்னை:
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளை வழக்கில் அதே வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்த முருகன் மற்றும் அவனது கூட்டாளிகள் 7 பேர் ஈடுபட்டதும், இதற்காக 10 நாட்களுக்கு மேல் திட்டமிட்டதும் அம்பலமானது.
இதை தொடர்ந்து முருகன், பாலாஜி, சந்தோஷ், சூர்யா உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை சேகரித்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முருகனுடன் சேர்ந்து கொள்ளையர்களில் ஒருவரான சந்தோஷ் பெரிய அளவில் திட்டம் தீட்டி உள்ளார்.
கொள்ளையடித்த நகைகளில் 3½ கிலோ நகைகளை அச்சரபாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வீட்டில் சந்தோஷ் கொடுத்து வைத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்து 3½ கிலோ நகைகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்து உள்ளனர். இது இவ்வழக்கில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட கொள்ளை வழக்கில் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் சிக்கியது எப்படி என்பது பற்றி போலீசில் பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது.
கொள்ளையன் சந்தோசின் மனைவி ஜெயந்தியும், அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டர் அமல்ராஜின் மனைவி இந்திராவும் சகோதரிகள் ஆவர். இதை தொடர்ந்து கொள்ளையடித்த நகையில் 3 கிலோ 700 கிராம் நகைகளை சந்தோஷ் தனது மனைவி மூலம் இன்ஸ்பெக்டர் மனைவியிடம் கொடுத்து வைத்தது தெரியவந்துள்ளது.
சந்தோசின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போதுதான் இந்த தகவல்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சந்தோசின் செல்போன் எண்ணில் இருந்து அவர் யார்-யாரிடம் பேசியுள்ளார் என்பதை போலீசார் புள்ளி விவரத்துடன் சேகரித்தனர். இதில்தான் அத்தனை உண்மைகளும் வெளிப்பட்டன.
சந்தோசிடம் போலீசார் விசாரணை நடத்திய போது தனது சகலைபாடியான இன்ஸ்பெக்டர் அமல்ராஜை எந்த சூழ்நிலையிலும் காட்டி கொடுத்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்து உள்ளார்.
"சார், உள்ளதை சொல்லி விடுகிறேன். ஆனால் நீங்கள் எனக்கு ஒரு சத்தியம் செய்து தரவேண்டும்" என்று போலீசாரிடம் சந்தோஷ் கூறி உள்ளார். இதை கேட்டு ஆடிப்போன போலீசார் என்ன உண்மையா சொல். நீ சொல்வதை போல் நடந்து கொள்கிறோம் என்று சத்தியம் செய்துள்ளனர்.
எனது சகலைப்பாடியான இன்ஸ்பெக்டர் அமல்ராஜின் வீட்டில் 3½ கிலோ நகைகளை கொடுத்து வைத்துள்ளேன். அந்த நகைகளை கொடுத்து விடுகிறேன். ஆனால் இன்ஸ்பெக்டர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. அவரது வேலைக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்றுகூறியும் போலீசிடம் சந்தோஷ் சத்தியம் கேட்டு உள்ளார். இதற்கும் சரி என்று கூறி சத்தியம் செய்த தனிப்படை போலீசார் 3½ கிலோ நகைகள் பற்றிய அத்தனை விவரங்களையும் திரட்டினர்.
இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3½ கிலோ நகைகளை மீட்பதற்காக தனிப்படை போலீசார் அச்சரப்பாக்கத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்த நகைகளை அதிரடியாக மீட்டனர்.
போலீசார் நெருங்கியதை அறிந்ததும் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் இந்த நகைகள் அனைத்தையும் தாமாக ஒப்படைப்பது போல கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கொள்ளையன் சந்தோஷ் பற்றிய அனைத்து தகவல்களும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியாகி கொண்டிருந்த நிலையில் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் இத்தனை நாட்கள் கழித்து நகைகளை ஒப்படைத்திருப்பது தான் அவர் மீதான சந்தேகத்தை அதிகரிக்க செய்துள்ளது.
இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அமல்ராஜ், அவரது மனைவி இந்திரா, கொள்ளையன் சந்தோசின் மனைவி ஜெயந்தி ஆகிய 3 பேரையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து உள்ளனர். 3 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் மூவரையும் கைது செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இன்ஸ்பெக்டர் அமல்ராஜை காவல் துறையில் உள்ள சிலர் தப்ப வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதை தொடர்ந்தே இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மீதான பிடி இறுகுகிறது.