பற்களை பிடுங்கிய விவகாரம்- மனித உரிமைகள் ஆணையத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆஜர்
- சேரன்மாகாதேவியில் சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையிலான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- பாதிக்கப்பட்டவர்கள் 13 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், 3 பேர் போலீசாருக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரியான பல்வீர்சிங், குற்ற வழக்குகளில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பான வீடியோக்களும் வைரலானது.
இதைத்தொடர்ந்து பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த குற்றச்சாட்டு குறித்து நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த சம்பவத்தை வழக்காக எடுத்து விசாரித்தது. பின்னர், இதுதொடர்பாக மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஐ.ஜி. விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி, பாதிக்கப்பட்ட வாலிபர்கள் 5 பேர் மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவில் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர். அப்போது அவர்கள் உதவி போலீஸ் சூப்பிரண்டு மட்டுமல்லாமல் காவல்துறையை சேர்ந்த வேறு சிலரும் கடுமையாக நடந்து கொண்டதாகவும், உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது புகார் அளிக்காமல் இருக்க போலீசார் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தனர்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் இன்று மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் இன்று ஆணையத்தின் முன்பு ஆஜராகிறார்.
அதேநேரம் சேரன்மாகாதேவியில் சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையிலான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 13 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், 3 பேர் போலீசாருக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக வி.கே.புரம் போலீஸ் நிலைய தனிப்பிரிவு காவலர் போக பூமன், கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலைய தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டவர்களே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அம்பை தனிப்பிரிவு காவலர் அல்லாமல், வி.கே.புரம் தனிப்பிரிவு காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளது சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
இந்த சம்பவங்கள் நடந்தபோது பணியில் இருந்து இன்ஸ்பெக்டர், காவலர்கள் உள்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கூறி வருகின்றனர். இதனால் இன்னும் அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.