தமிழ்நாடு (Tamil Nadu)

டி.என்.பி.எஸ்.சி. மூலம் 3.5 லட்சம் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்- பாலு வலியுறுத்தல்

Published On 2024-10-16 07:58 GMT   |   Update On 2024-10-16 07:58 GMT
  • டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதும் முறைகேடுகள் தொடர்கின்றன.
  • தி.மு.க. தலைமை காட்டும் இடங்களில் கையெழுத்திடும் பணியை மட்டும் செய்து கொண்டு அவர் அமைதி காக்க வேண்டும்.

சென்னை:

பா.ம.க. செய்தி தொடர்பாளர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுத் துறைகளில் நான்காம் தொகுதி பணியிடங்கள் லட்சக்கணக்கில் காலியாக இருக்கும் நிலையில், அப்பணிக்காக டி.என்.பி.எஸ்.சி நடத்திய போட்டித்தேர்வுகளின் மூலம் நிரப்பப்படவுள்ள இடங்களின் எண்ணிக்கையை 8,932-லிருந்து 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதும் முறைகேடுகள் தொடர்கின்றன. அவை குறித்த அனைத்து விவரங்களும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுவோருக்குத் தெரியும். அவற்றைக் களைய வேண்டும் என்று நினைத்தால், ஊடகங்கள் முன்னிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களிடம் இதுகுறித்து கருத்துக் கேட்கலாம். அதற்கு அமைச்சர் கயல்விழி தயாரா? இப்படியாக டி.என்.பி.எஸ்.சி அமைப்பில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கும் போது சமூகநீதிக்காக குரல் கொடுத்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது குறை கூற அமைச்சர் கயல்விழி முயல்வது கண்டிக்கத்தக்கது.

அவருக்கு சமூகநீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தவாறு 3.5 லட்சம் காலியிடங்களை நிரப்புவதுடன், 2 லட்சம் பணியிடங்கள் புதிதாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தி.மு.க. தலைமை காட்டும் இடங்களில் கையெழுத்திடும் பணியை மட்டும் செய்து கொண்டு அவர் அமைதி காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News