தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கு- பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு

Published On 2022-08-26 06:23 GMT   |   Update On 2022-08-26 06:23 GMT
  • கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம், கடந்த வாரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
  • வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகாவுக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி மரணமடைந்தார். மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம், கடந்த வாரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து ஜாமீன் கோரி பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை போலீசார் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்து வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி நிர்வாகிகள் 3 பேர், ஆசிரியைகள் 2 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பள்ளி முதல்வர் சிவசங்கரன், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்திக்கு நீதிபதி இளந்திரையன் ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.

மாணவி மரண வழக்கில் சிபிசிஐடியால் கைதான வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகாவுக்கும் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News