தமிழ்நாடு

மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை- பாலகிருஷ்ணன்

Published On 2024-04-19 05:01 GMT   |   Update On 2024-04-19 05:06 GMT
  • தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற எண்ணத்தில் தெளிவாக உள்ளார்கள் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது தெரிந்து கொண்டோம்.
  • சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தொல்.திருமாவளவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

சிதம்பரம்:

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அவரது மனைவி ஜான்சிராணியுடன் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்தினார்.

பின்னர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் காலையிலிருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டை விட இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளில் வெற்றி பெறும். சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தொல்.திருமாவளவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற எண்ணத்தில் தெளிவாக உள்ளார்கள் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது தெரிந்து கொண்டோம். வட இந்தியாவில் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் சூழ்நிலையில் 2019-ல் வட இந்தியாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்றார். அதேபோல் இம்முறை வெற்றி பெற வாய்ப்பு இல்லை.

கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது, மதசார்பின்மையை பாதுகாப்பது, கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பது, இந்தியாவின் பன்முகத் தன்மையை பாதுகாப்பது, மக்களுடைய வாழ்வாதாரம், வேலை இல்லா திண்டாட்டம் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக, அடிப்படை பிரச்சனைகளை முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தோம். இந்த பிரசாரம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News