குற்ற சம்பவங்களை தடுக்க வலியுறுத்தி சென்னிமலை பகுதியில் கடையடைப்பு போராட்டம்
- எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
- போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இன்று மூடப்பட்டிருந்தன.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் கடந்த ஓராண்டாக பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி சென்னிமலை யூனியன் முருங்கதொழுவு ஊராட்சிக்குட்பட்ட குட்டக்காடு என்ற இடத்தில் விவசாயத் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதிகளை மர்ம கும்பல் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி அவர்கள் வீட்டிலிருந்த பணம்-நகைகளை கொள்ளை அடித்தது.
இந்த தாக்குதலில் முதியவர் பலியானார். அவரது மனைவி கோமா நிலைக்கு சென்று பின்னர் உரிய சிகிச்சை பெற்று உயிர் தப்பினார். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் தாண்டிவிட்டது. ஆனால் தற்போது வரை இந்த கொலை மற்றும் கொள்ளையில் தொடர்புடைய ஒரு குற்றவாளி கூட கைது செய்யப்படவில்லை.
இதேபோல் கடந்த 9-ந் தேதி சென்னிமலை அடுத்த முருங்க தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட கரியங்காட்டு தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதிகளை மர்ம கும்பல் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து அவர்கள் வீட்டில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றது. இந்த இரட்டை கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெருந்துறை டி.எஸ்.பி. தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டது. எனினும் தற்போது வரை இந்த இரட்டை கொலையில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. மேலும் கடந்த சில நாட்களாக சென்னிமலை பகுதியில் திருட்டு மற்றும் வழிபறி சம்பவங்கள் நடந்தது. இந்த தொடர் குற்ற சம்பவம் காரணமாக சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி சேர்ந்த மக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து கொலை, கொள்ளை குற்ற சம்பவங்களை கண்டித்தும், குற்ற சம்பவங்களை தடுக்க வலியுறுத்தியும் சென்னிமலை நகர மற்றும் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பான நோட்டீசும் சென்னிமலை கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இதனையேற்று இன்று சென்னிமலை பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சென்னிமலை பஸ் நிலையம், நான்கு ராஜ வீதிகள், முகாசி பிடாரியூர், ஓட்டப்பாறை, மேலப்பாளையம், முருங்கைத்தொழுவு, பசுவட்டி ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேப்போல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இன்று மூடப்பட்டிருந்தன. பனியன் நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள் என 400-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களும் இன்று இயங்கவில்லை. ஆனால் அதே சமயம் அத்தியாவசிய பொருட்களான பால் கடைகள், மருந்தகங்கள், ஆஸ்பத்திரிகள் வழக்கம் போல் இயங்கின.
இதுபோல் பஸ் போக்குவரத்தும் வழக்கம் போல் நடந்தது. ஆனால் பயணிகள் குறைந்த அளவே பயணம் செய்தனர். முழு கடையடைப்பு போராட்டம் காரணமாக சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சென்னிமலையில் உள்ள முக்கிய சந்திப்பு, கடைவீதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.