தி.மு.க. கூட்டணி 34 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு - புதுச்சேரியில் முந்துகிறது பா.ஜ.க. : 'தந்தி டி.வி.' கருத்துக்கணிப்பில் தகவல்
- தமிழகத்தில் 5 தொகுதிகளில் கடும் போட்டி காணப்படுகிறது.
- பா.ஜ.க. கூட்டணி புதுச்சேரியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
சென்னை:
2024 பாராளுமன்ற தேர்தலையொட்டி தந்தி டி.வி. சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 35 ஆயிரத்து 600 வாக்காளர்களிடம் மார்ச் 20-ந்தேதி முதல் ஏப்ரல் 14-ந்தேதி வரை இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
இதில் 42 சதவீதம் பேர் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க போவதாக கூறியுள்ளனர். 34 சதவீதம் பேர் அ.தி.மு.க. கூட்டணிக்கும், 18 சதவீதம் பேர் பா.ஜ.க. கூட்டணிக்கும் வாக்களிக்க விரும்புவதாக தெரிவித்து உள்ளனர். நாம் தமிழர் கட்சிக்கு 5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
தந்தி டி.வி. கடந்த பிப்ரவரி மாதம் கருத்து கணிப்பு நடத்திய போது தி.மு.க.வுக்கு 42 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். தி.மு.க.வின் செல்வாக்கு அப்படியே தொடருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க.வுக்கு 30 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். தற்போது அ.தி.மு.க. ஆதரவு 4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பா.ஜ.க.வுக்கு 13 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். தற்போது பா.ஜ.க.வுக்கு 5 சதவீதம் ஆதரவு அதிகரித்துள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். தற்போது அக்கட்சிக்கு 3 சதவீத வாக்குகள் சரிந்துள்ளது.
யார் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்கு 66 சதவீதம் பேர் ராகுல் காந்திக்கும், 33 சதவீதம் பேர் மோடிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. கூட்டணி 29 தொகுதிகளில் எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ளது. மத்திய சென்னை, திருவள்ளூர், அரக்கோணம், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஆரணி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தென்காசி, கிருஷ்ணகிரி, சேலம், தூத்துக்குடி, விருதுநகர், கடலூர், நீலகிரி, பெரம்பலூர், சிதம்பரம், விழுப்புரம், நாமக்கல், திருப்பூர், தர்மபுரி, கன்னியாகுமரி, வடசென்னை, கரூர் ஆகிய 29 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி எளிதாக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
ஈரோடு, திருச்சி, தேனி, ராமநாதபுரம், தென்சென்னை தொகுதிகளில் கடும் போட்டிக்கு மத்தியில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
பா.ஜ.க. கூட்டணி புதுச்சேரியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியில் பா.ஜ.க. 39 சதவீதம் முதல் 45 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 36 முதல் 42 சதவீத வாக்குகளையும், அ.தி.மு.க. 10 முதல் 16 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 5 சதவீதம் முதல் 8 சதவீத வாக்குகளையும், மற்றவர்கள் 1 சதவீதம் முதல் 4 சதவீத வாக்குகளையும் பெற வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் 5 தொகுதிகளில் கடும் போட்டி காணப்படுகிறது. பா.ஜனதா கூட்டணியில் பிரபலங்கள் போட்டியிடும் வேலூர், திருநெல்வேலி, கோவை ஆகிய தொகுதிகளில் கடும் இழுபறி ஏற்பட வாய்ப்பு உள்ளது. கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சியில் தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ஜ.க. கூட்டணி 18 இடங்களில் 20 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளது. மத்திய சென்னை, அரக்கோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தென்காசி, விருதுநகர், கடலூர், நீலகிரி, பெரம்பலூர், திருப்பூர், தர்மபுரி, கன்னியாகுமரி, தேனி, ராமநாதபுரம், தென்சென்னை, வேலூர், திருநெல்வேலி, கோவை ஆகிய தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி 20 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளது.
பா.ஜ.க. கூட்டணி கணிசமான வாக்குகளை பிரிப்பதால் மத்திய சென்னை, தஞ்சாவூர், கடலூர், பெரம்பலூர், தர்மபுரி, கன்னியாகுமரி, தேனி, ராமநாதபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி 3-ம் இடம் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 34 தொகுதிகளிலும், பா.ஜ.க. கூட்டணி 1 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. 5 தொகுதிகளில் கடும் இழுபறி இருக்கலாம் எனவும் தெரிகிறது.
இவ்வாறு தந்தி டி.வி. கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.