தமிழ்நாடு (Tamil Nadu)

கடல் போல் காட்சி அளிக்கும் பவானிசாகர் அணை

Published On 2022-07-29 04:32 GMT   |   Update On 2022-07-29 04:32 GMT
  • 100 அடியை தாண்டியதால் பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
  • சுற்றுலா பயணிகள் பவானிசாகர் அணைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

ஈரோடு:

பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இதையடுத்து பவானிசாகர் அணை 28-வது முறையாக 100 அடியை எட்டியது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.20 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,318 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடியும் என மொத்தம் 105 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படவில்லை. தொடர்ந்து அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது.

100 அடியை தாண்டியதால் பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பவானிசாகர் அணைக்கு வரத் தொடங்கியுள்ளனர். அவர்கள் பவானிசாகர் அணை மேல் பகுதிக்கு சென்று கண்டுகளித்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பவானிசாகர் அணை கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி மாலை 4 மணிக்கும், 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி காலை 6 மணிக்கும், 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரவு 10 மணிக்கும், கடந்த ஆண்டு ஜூலை 26 -ந் தேதி மாலை 4 மணிக்கும் 100 அடியை எட்டி இருந்தது.

அதனைத் தொடர்ந்து 5-வது ஆண்டாக பவானிசாகர் அணை தற்போது 100 அடியை தொட்டுள்ளது. பவானிசாகர் அணை தொடர்ந்து 5-வது ஆண்டாக 100 அடியை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை அடிவாரப் பகுதியில் உள்ள வரட்டுப்பள்ளம் அணை இன்று காலை 6 மணி அளவில் தனது முழுக் கொள்ளளவான 33.5 அடியை எட்டியது. அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணை கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் ஏப்ரல் மாதம் முதல் இன்று வரை 3 முறை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த அணையை நம்பி உள்ள பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News