கனமழை எதிரொலி: போடி-சென்னை ரெயில் முன்னறிவிப்பின்றி ரத்து
- பல ஆம்னி பஸ்கள் சென்னைக்கு செல்லவில்லை.
- கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டது.
மேலசொக்கநாதபுரம்:
போடியில் இருந்து தேனி, மதுரை, கரூர் வழியாக சென்னைக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 நாட்கள் அதி விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டும், அட்டவணைகள் மாற்றியமைக்கப்பட்டும் உள்ளது.
குறிப்பாக தென் மாவட்ட ரெயில்களின் இயக்கம் மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு போடியில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய அதி விரைவு ரெயில் முன் அறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் டிக்கெட்டை ரத்து செய்து கட்டணத்தை திரும்ப பெற்றுச் சென்றனர்.
இதே போல் பல ஆம்னி பஸ்கள் சென்னைக்கு செல்லவில்லை. கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டது. இதனால் அவசர தேவைக்காக சென்னை செல்ல கைக்குழந்தை, முதியவர்களுடன் வந்த பயணிகள் சிரமம் அடைந்தனர்.
அரசு பஸ்கள் மற்றும் மாற்று வாகனங்களில் சென்னை சென்றனர். அடுத்ததாக வியாழக்கிழமை ரெயில் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.