தமிழ்நாடு

மாணவியை கர்ப்பிணியாக்கி கொன்று புதைத்த காதலன் கைது- பரபரப்பு தகவல்கள்

Published On 2023-05-12 11:24 GMT   |   Update On 2023-05-12 11:25 GMT
  • கைது செய்யப்பட்ட அகிலன், சுரேஷ்குமார் ஆகியோரை போலீசார் ரகசியமான இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
  • கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் கிராமத்தில் 100 நாள் வேலையில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

அங்கிருந்த சுடுகாட்டின் அருகில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட போது ஒரு இளம்பெண்ணின் உடல் கிடைத்தது. இது தொடர்பான புகாரின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னா தலைமையிலான கஞ்சனூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் இறந்து போன இளம்பெண் யார்? அவரை கொலை செய்து புதைத்த மர்மகும்பல் யார்? என்பது குறித்து விசாரித்து வந்தனர். செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவித்தனர். குறிப்பாக 25 வயதிலிருந்து 30 வயதிற்குள் காணாமல் போனவர்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் வந்தது. இதில் அந்த பெண் 3 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும், அந்த பெண்ணிற்கு 17 முதல் 19 வயதிற்குள் இருக்கலாம் என்ற தகவல் போலீசாருக்கு தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள கண்டமானடியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி பிரியதர்ஷினி (வயது 17) என்பது தெரியவந்தது. அவரை கொன்று புதைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில். பிரியதர்ஷினியை கொன்றது விக்கிரவாண்டியை அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் மகன் அகிலன் (23) என்பது தெரியவந்தது.

அவரை போலீசார் தேடி வந்தனர். அவர் சென்னையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அகிலனை கைது செய்தனர். இவர் பேண்ட் வாத்திய குழுவில் டிரம்ஸ் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். அவர் பிரியதர்ஷினியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த கொலைக்கு உடந்தையாக விக்கிரவாண்டியை அடுத்துள்ள கக்கனூர் கிராமம் கக்கன் வீதியில் வசிக்கும் ராஜாமணி மகன் சுரேஷ் குமார் (22) இருந்ததாக அகிலன் தெரிவித்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில் அகிலன் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அகிலன் உறவினர் வீடு விழுப்புரத்தை அடுத்த கப்பூரில் உள்ளது. அதே போல பிரியதர்ஷினி உறவினர் வீடும் கப்பூரில் உள்ளது.

இவர்கள் இருவரும் அவரவர் உறவினர் வீட்டிற்கு வந்த போது பிரியதர்ஷினிக்கும், அகிலனுக்கும் காதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அகிலன் அடிக்கடி கண்டமானடி கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் பிரியதர்ஷினியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இத்தகவல் அறிந்த பிரியதர்ஷினியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனை பிரியதர்ஷினி கேட்காமல், தொடர்ந்து அகிலனுடன் பழகி வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், தான் 3 மாத கர்ப்பிணியானதையும், தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படியும் அகிலனிடம் பிரியதர்ஷினி வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து சித்தேரிப்பட்டுக்கு வா, திருமணம் செய்து கொள்கிறேன் என்று பிரியதர்ஷினியை அழைத்து வந்து கொன்றுள்ளது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட அகிலன், சுரேஷ்குமார் ஆகியோரை ரகசியமான இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். இக்கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கண்டமானடி, சித்தேரிப்பட்டு கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News