தமிழ்நாடு

6 கால்களுடன் பிறந்த கன்றுக்குட்டியை வினோதமாக பார்த்து செல்லும் மக்கள்

Published On 2024-03-19 04:02 GMT   |   Update On 2024-03-19 04:02 GMT
  • இயற்கைக்கு மாறாக 2 அல்லது 3 கால்களுடன் கன்றுகுட்டி பிறப்பது பாலிமெலியா எனப்படுகிறது.
  • 6 கால்களுடன் பிறந்த கன்றுகுட்டியை அதன் உரிமையாளர் கோவிலுக்கு நேர்ந்துவிட்டதாக தெரிவித்தார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அருகே உள்ள தென்னந்திரையான்பட்டி (முள்ளூர்) கிராமத்தை சேர்ந்த ஞானசேகரந்ஜெயந்தி தம்பதி பசு வளர்த்து வருகின்றனர். இவர்களது பசு கன்று ஈன்றது. அந்த கன்றுக்கு வழக்கத்தை விட 2 கால்கள் அதிகமாக மொத்தம் 6 கால்கள் காணப்பட்டன. இதை அந்த பகுதி பொதுமக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இதுபற்றி கால்நடை துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர் வந்து பசுவையும், கன்றினையும் பார்வையிட்டார். பின்பு அவர் கன்றுகுட்டியை ஆய்வு செய்தார். அதன் இதய துடிப்பு, மூச்சுக்காற்று, வெப்ப ஓட்டம் சீராக உள்ளதை அறிந்தார். பின்பு அவர் கூறியதாவது:-

இயற்கைக்கு மாறாக 2 அல்லது 3 கால்களுடன் கன்றுகுட்டி பிறப்பது பாலிமெலியா எனப்படுகிறது. இவை மரபணு கோளாறு அல்லது பிழை எனப்படும் குரோமோசோம் பிரிதலில் ஏற்படும் மாற்றத்தினாலும், கதிர்வீச்சு, வேதியியல், விட்டமின் மாற்றத்தினாலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே 6 கால்களுடன் பிறந்த கன்றுகுட்டியை அதன் உரிமையாளர் கோவிலுக்கு நேர்ந்துவிட்டதாக தெரிவித்தார். எனினும் கன்றுகுட்டிக்கு குடற்புழு நீக்கம் மருந்து, கால்சியம் கலவை கொடுத்து நல்லமுறையில் வளர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News