கார் குண்டு வெடிப்பு: கைதான 5 பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
- கார் குண்டு வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.
- கோவையில் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் வைத்து 5 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
கோவை:
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஜமேசா முபீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாநகரப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் முபினுடன் தொடர்பில் இருந்த 6 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் நடத்தினர்.
கார் குண்டு வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி மேலும் 5 பேரை கைது செய்தனர். மொத்தம் இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை பூந்தமல்லி என்.ஐ.ஏ. கோட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முகமது அசாருதீன், பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகிய 5 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிக்ள மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. வழக்கை விசாரித்து நீதிபதி 5 பேரையும் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார். இதனையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்தனர். கோவையில் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் வைத்து 5 பேரிடமும் விசாரணை நடத்தினர். மேலும் சில இடங்களுக்கும் அவர்களை நேரில் அழைத்துச் சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே இவர்களிடம் 2 முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தற்போது 3-வது முறையாக விசாரணை நடைபெற்று வருகிறது.