பற்களை பிடுங்கிய விவகாரம்: காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய பணியிடம்- டி.ஐ.ஜி. உத்தரவு
- பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நெல்லை:
நெல்லை போலீஸ் சரகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் 10 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி அம்பாசமுத்திரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டராக இருந்த ராஜகுமாரி தென்காசி மாவட்டம் குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். வி.கே.புரம் இன்ஸ்பெக்டராக இருந்த பெருமாள் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளகுறிச்சி வட்ட இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று மாவட்ட உளவு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்து பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கோமதி, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதில் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.