தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சென்னையில் களை கட்டியது- கேக், நட்சத்திரம் விற்பனை அமோகம்

Published On 2022-12-20 06:02 GMT   |   Update On 2022-12-20 06:02 GMT
  • கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் பாடகர் குழுவினர் வீடு, வீடாக சென்று குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள், இனிப்புகள் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
  • ஒவ்வொரு திருச்சபையிலும் நலிந்தோருக்கு உதவிகள், புத்தாடைகள் வழங்கப்படுகின்றன.

சென்னை:

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் பண்டிகையான கிறிஸ்துமசை வருகிற 25-ந்தேதி கொண்டாட தயாராகி வருகின்றனர்.

அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஏழைகளுக்கு உதவி செய்வதே இப்பண்டிகையின் நோக்கமாகும். 2 வருடத்திற்கு பிறகு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உற்சாகம் அடைந்து உள்ளது.

டிசம்பர் முதல் வாரத்திலேயே வீடுகளில் நட்சத்திரங்கள், குடில்கள், கிறிஸ்துமஸ் மரம் வைக்க தொடங்கினார்கள். கிறிஸ்துவ ஆலயங்களிலும் நட்சத்திரங்கள், குடில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் பாடகர் குழுவினர் வீடு, வீடாக சென்று குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள், இனிப்புகள் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு திருச்சபையிலும் நலிந்தோருக்கு உதவிகள், புத்தாடைகள் வழங்கப்படுகின்றன.

பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை சூடு பிடித்து உள்ளது. ஆலயங்களை அழுகுபடுத்த விதவிதமான அலங்கார பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

சென்னை பாரிமுனையில் உள்ள கடைகள், புரசைவாக்கம், பெரம்பூர், அண்ணாநகர், தியாகராயநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நட்சத்திரங்கள், வண்ண மின் விளக்குள், குடில்கள் மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.

கிறிஸ்தவ தேவாலயங்கள், திருச்சபைகளில் இப்போதே அலங்காரப் பணிகள் தொடங்கி விட்டன. ஆலயங்கள் முழுவதும் நட்சத்திரங்கள், மின் விளக்குகள் மூலம் அழகுப்படுத்தப்பட்டுள்ளன. குழந்தை இயேசு பிறப்பை சித்தரிக்கும் மாட்டுத் தொழுவம் அடங்கிய குடில்கள் சாந்தோம், பெசன்ட் நகர், எழும்பூர், மாயவரம், பெரம்பூர், அண்ணாநகர் உள்ளிட்ட கத்தோலிக்க திருச்சபைகளில் அமைக்கப்பட்டு உள்ளன. இதனை கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் பார்த்து வணங்கி செல்கின்றனர்.

மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் கேக் விற்பனையும் அதிகரித்து உள்ளது. பிரபல கேக் நிறுவனங்களில் பிளம் கேக் உள்ளிட்ட விதவிதமான கேக்குகளை ஆர்டர் செய்துள்ளனர்.

ஆலயங்களில் மக்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையன்று கேக் வழங்குவதற்காக மொத்தமாக ஆர்டர் செய்து வருகின்றனர். இதனால் தற்போது கேக் கடைகளில் கூட்டம் நிரம்பி உள்ளது.

புத்தாடைகள் வாங்குவதற்கு ஜவுளி கடைகளுக்கும் கூட்டம், கூட்டமாக மக்கள் சென்று வருகின்றனர்.

மேலும் நட்சத்திர ஓட்டல்கள், கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், காப்பகங்கள் போன்றவற்றிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. ஆதரவற்ற மையங்களில் உள்ள முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் ஆகியோருக்கு பல்வேறு கிறிஸ்துமஸ் அமைப்புகள் புத்தாடைகள், கேக் வழங்கி வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

சென்னையில் உள்ள நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ ஆலயங்கள், திருச்சபைகளில் மட்டுமின்றி வீடுகளிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உற்சாகம் அடைந்துள்ளது.

Tags:    

Similar News