தமிழ்நாடு

சென்னை-டோக்கியோ இடையே மீண்டும் விமான சேவை தொடங்க வேண்டும்: மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Published On 2023-05-31 11:03 GMT   |   Update On 2023-05-31 11:03 GMT
  • நேரடி விமான இணைப்பு இல்லாததால், சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையிலான பயண நேரம் சுமார் 7 மணி நேரம் இரட்டிப்பாகி உள்ளது.
  • சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டோக்கியோ-சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் இயக்குவது குறித்தும், சிங்கப்பூர் -மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்கு இன்று கடிதம் எழுதி உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையே நேரடி விமான சேவை இல்லை, 2019-ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஆல் நிப்பான் ஏர்வேஸ் சென்னை மற்றும் டோக்கியோ இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கியது. கொரோனா தொற்றுநோய் காலத்தில் இது நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இந்த விமான சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை.

நேரடி விமான இணைப்பு இல்லாததால், சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையிலான பயண நேரம் சுமார் 7 மணி நேரம் இரட்டிப்பாகி உள்ளது. சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.

சிங்கப்பூரில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 4 லட்சம் பேர் கணிசமான அளவில் வசித்து வருகிறார்கள். இன்னும் தமிழ்நாட்டில் தங்கள் சொந்த நகரங்கள் மற்றும் கிராமங்களில், முக்கியமாக தென் தமிழ்நாட்டில் தொடர்புகளைக் கொண்டு உள்ளனர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து பலர் சிங்கப்பூருக்கு வேலைக்காக செல்கின்றனர்.

சிங்கப்பூருக்கும், சென்னைக்கும், திருச்சிக்கும் இடையே தினசரி விமான சேவையும், சிங்கப்பூருக்கும், கோயம்புத்தூருக்கும் இடையே தினசரி ஒரு விமானமும் இயக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே வாரத்திற்கு 3 முறை மட்டுமே விமானச் சேவை உள்ளது.

சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே அதிக விமானங்கள் இயக்கப்பட வேண்டும் கோரிக்கையை சாதகமாக பரிசீலித்திட ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News