வைகோவை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட வைகோ ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
- வைகோவிற்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 25-ந்தேதி நெல்லையில் கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக நெல்லையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட வைகோ ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்றது. இதையடுத்து வைகோவிற்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து வைகோவிற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில் அவர் குணமடைந்து வருகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைகோவை தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பில் வைகோவின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.