தமிழ்நாடு

திமுக மாவட்ட செயலாளர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்

Published On 2023-10-01 07:13 GMT   |   Update On 2023-10-01 07:13 GMT
  • தி.மு.க. அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
  • ஒவ்வொரு பகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும் அந்த பட்டியலை ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் சரி பார்க்க வேண்டும்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது.

இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார்.

அதற்கேற்ப மத்தியில் ஆட்சி நடத்தும் பிரதமர் மோடியையும், பாரதிய ஜனதா கட்சியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்று பிரதமர் மோடி சொன்ன வாக்குறுதியை ஒவ்வொரு மேடையிலும் பேசி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதையெல்லாம் பிரதமர் நிறைவேற்றினாரா? என்று கேள்வி கேட்டு வருகிறார்.

அது மட்டுமின்றி பா. ஜனதாவின் கடந்த கால தவறுகளை திரும்ப திரும்ப சுட்டிக்காட்டி மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறார். கட்சி நிர்வாகிகளையும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட அறிவுறுத்தி வருகிறார்.

அந்த வகையில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் கூட்டத்தை மண்டல வாரியாக கூட்டி அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

திருச்சி, ராமேசுவரம், காங்கேயம் ஆகிய ஊர்களில் மண்டல அளவில் (பி.எல்.ஏ.2) வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தையும் நடத்தி உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்கள் எப்படி செயல்பட வேண் டும் என்பது பற்றியும் சமூக வலைதள பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்தும் அவர் எடுத்துரைத்து வருகிறார்.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக இன்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தினார்.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் அமைச்சர்களும் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம்தான் உள்ளது. இந்த தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும்.

இதற்காக தி.மு.க. அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

ஒவ்வொரு பகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்கள் (பி.எல்.ஏ.2) நியமிக்கப்பட்டிருந்தாலும் அந்த பட்டியலை ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் சரி பார்க்க வேண்டும்.

விறுப்பு வெறுப்புகளை மறந்து கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும். அவரவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக செய்து கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் நாம் வெற்றி பெற்றதை விட இந்த பாராளுமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்து 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்காக தேர்தல் பணி களை தீவிரப்படுத்துங்கள்.

தொகுதி பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் நடைபெறும் கூட்டங்களில் தவறாது பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். வருகிற தேர்தலில் கழகத்தின் வெற்றியே முக்கியம் என்கின்ற வகையில் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும் என்று அவர் அதிரடியாக உத்தரவிட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக முக்கிய மாவட்டச் செயலாளர்களின் கருத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கேட்டறிந்தார். அப்போது மாவட்டச் செயலாளர்கள் பல்வேறு அறிவுரைகளையும் அவர் வழங்கினார்.

Tags:    

Similar News