என் மனைவி கோவிலுக்கு செல்வது அவரது விருப்பம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- நோய் கிருமிகளை எதிர்த்து நாம்தான் போராடியாக வேண்டும்.
- சாதி, மதத்தின் பெயரால் நாட்டை நாசம் செய்ய நினைக்கும் ஒரு கூட்டத்துக்கு எதிராக நாம் மோதிக் கொண்டிருக்கிறோம்.
சென்னை:
தி.மு.க. சமூக வலைதள ஐ.டி.பிரிவு தன்னார்வலர்கள் கலந்து கொண்ட கூட்டம் சென்னை செனாய் நகரில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சமூக ஊடகங்கள் மூலமாக மக்களை எளிதில் சென்றடைய முடியும்... அவர்களின் 'ரியாக்ஷன்' என்ன என்பதையும் தெரிந்துக் கொள்ள முடியும்.
அவதூறு பரப்பி, திட்டி ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் வந்து விடுகிறது. நமது கருத்துக்கள் நொடியில் கோடிக்கணக்கான பேருக்கு போய் சேர்ந்து விடுகிறது. 'முரசே முழங்கு' நாடக வெற்றி விழா நிகழ்ச்சிக்கு போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த போது அதிகாலை 4 மணி இருக்கும். நோட்டீஸ் ஒட்டக் கூடாது என்று குறிப்பிட்டிருந்த கல்லூரி சுவற்றில் போய் போஸ்டரை ஒட்டி விட்டேன்.
அதனால் என் மீது வழக்கும் போட்டார்கள். அப்போது முதலமைச்சர் மகன் நான். அப்போதைய நமது ஆட்சி அப்படி இருந்தது. இன்றும் அப்படி தான் உள்ளது. சமூக வலைதளங்களை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
திராவிட இயக்கம் தமிழர்கள் தலை நிமிர்வதற்காக பிறந்த இயக்கமாகும். யாருடைய தலையையும் எடுக்க பிறந்த இயக்கம் இல்லை. இன்று சீவிடுவேன் சீவிடுவேன் என்று சொல்கிறார்களே. அதற்காகத்தான் இதை சொல்கிறேன். வலை தளங்கள் ஒருவரை ஒரே நாளில் புகழின் உச்சிக்கு கொண்டு போய் சேர்க்கும். ஒருவர் பல காலம் கட்டமைத்த பிம்பத்தை சில நொடிகளில் உடைத்து விடும். நெகட்டிவ் பிரசாரங்கள் மூலமாக எதிரிகளை வீழ்த்துவதை விட பாசிட்டிவ் பிரசாரங்கள் மூலமாக நம்மை வளர்த்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும்.
தன்னை யாரெல்லாம் எதிர்த்தார்கள் என்று தந்தை பெரியார் பட்டியல் போட்டு சொல்லி இருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் அன்று இருந்த தலைவர்கள், இயக்கங்கள் பத்திரிகைகள் என எல்லோராலும் எதிர்க்கப்பட்டவர் பெரியார்.
அவர்களின் பெயரையெல்லாம் பட்டியல் போட்டால் பலரை உங்களுக்கு தெரியாது. ஆனால் பெரியார் இன்னும் வாழ்கிறார்.
வாழ்க வசவாளர்கள் என்று கூறிக்கொண்டே எதிரிகளை வீழ்த்தியவர் பேரறிஞர் அண்ணா. கூட்டில் இருக்கிற புழுக்களைப் போல கொட்டப்பட்டு கொட்டப்பட்டு வளர்ந்தவன் நான்.
எதிரிகளுக்கு மட்டுமே பதில் சொல்லிக்கொண்டிருந்தால் நான் வளர்ந்திருக்கவே முடியாது. யாருக்கெல்லாம் நன்மை செய்தேனோ அவர்களால் அதிகமாக தாக்கப்பட்டவன் என்று கலைஞர் கூறி உள்ளார்.
இதெல்லாம் நமக்கான பாடங்கள். அதற்காக யாருக்கும் பதில் சொல்லக்கூடாது. எல்லா விமர்சனங்களையும் ஏற்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. குறை சொல்பவர்கள் எல்லா காலத்துக்கும் இருந்து உள்ளனர்.
மருந்து கண்டுபிடித்து விட்டால் நோய் கிருமிகள் ஒழிந்து விடுமா என்ன? சமூகத்தை பின்நோக்கி இழுத்துக் கொண்டிருந்த நோய் கிருமிகளை ஒழிக்க உருவான மருந்துதான் திராவிட இயக்கம்.
நோய் கிருமிகளை எதிர்த்து நாம்தான் போராடியாக வேண்டும். இன்னைக்கு சோசியல் மீடியாவும், சில மீடியாக்களும் அவர்கள் கண்ட்ரோலில் உள்ளது. அதனால் பொய் சொல்லவும், அவதூறு பரப்பவும் அவர்கள் தயங்குவது இல்லை.
இதற்கு சரியான பதிலை நாம் சொல்ல வேண்டும். ராணுவத்தோட முன்கள வீரர்கள் மாதிரி கழகத்தோட முன்தள வீரர்கள் நீங்கள். களமும் தளமும் கை கோர்த்தால் தான் வெற்றி கிடைக்கும்.
களத்தில் நிற்கும் வேட்பாளர்களுக்கு களமாடி வெற்றியை தேடி தருபவர்கள்தான் நீங்கள். இங்கு வந்துள்ள உங்களுக்கு பாலோவர்ஸ் எண்ணிக்கை 92 லட்சத்து 62 ஆயிரத்து 618. ஏறத்தாழ ஒரு கோடிக்கு பாலோவர்ஸ் வந்திருக்காங்க. தன்னலமற்ற செயல்பாட்டால் நீங்கள் கழகத்துக்கு கிடைத்திருக்கீங்க.
தொண்டர்களின் உழைப்பு கழகத்துக்கு ரத்த நாளம் எனக்கு கலைஞர் சொல்லி இருக்கிறார். அதனால்தான் தலைமை கழகத்தில் இருந்து வெளியிடும் அறிக்கைகளுக்கு முன்பே உங்களிடமிருந்து ரியாக்ஷன் வந்து விடுகிறது. நாங்கள் சொல்ல முடியாததை சொல்ல தயங்குவதை உங்களால் சொல்ல முடியும்.
அந்த வகையில் தி.மு.க.வுக்கு நீங்கள் மிகப்பெரிய பலம். ஏராளமான அரசியல் எதிரிகளை வெற்றி கண்ட வரலாறு நம்மோடது. கொம்பாதி கொம்பர்கள் என்று சொல்லப்பட்டவர்களை எல்லாம் எதிர்த்து நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்.
இந்த இயக்கத்தை அழித்து விடலாம் என்று நினைத்தவர்களின் எண்ணம்தான் அழிந்து போயிருக்கிறது. தி.மு.க.வை கற்பனையில் கூட அழிக்க முடியாது. திராவிட இயக்கத்தை ஒழிப்பேன் என்று சொன்ன பலர் கடைசியில் இங்கேதான் அடைக்கலமாகி உள்ளனர்.
மூதறிஞர் ராஜாஜியும், சிலம்பு செல்வர் ம.பொ.சி.யும் இந்த இயக்கத்தை எதிர்த்தவர்கள். ஆனால் 1967-ல் தி.மு.க.வை ஆதரித்தார் ராஜாஜி. மயிலாப்பூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார் ம.பொ.சி.
அந்த தலைவர்களுக்கெல்லாம் மாற்று கொள்கை இருந்தது. ஆனால் இன்று பாரதிய ஜனதா, அ.தி.மு.க. போன்ற வெகுஜன விரோதிகளோடு நாம் மோதிக்கொண்டிருக்கிறோம். பாசிசத்துக்கு எதிராக நேரடியாக மோதிக்கொண்டிருக்கிறோம்.
சாதி, மதத்தின் பெயரால் நாட்டை நாசம் செய்ய நினைக்கும் ஒரு கூட்டத்துக்கு எதிராக நாம் மோதிக் கொண்டிருக்கிறோம். பாரதிய ஜனதாவின் சாதித் தன்மை இந்தியாவுக்கே எதிரானதாகும். ஒட்டு மொத்த மனிதகுலத்துக்கே எதிரானது.
இப்படிப்பட்ட பாசிசவாதிகள் ஒருபக்கம். இவர்களோட பாதம் தாங்கிகளாக இருந்து தமிழ்நாட்டை அடகு வைத்த அ.தி.மு.க. ஒரு பக்கம். கொள்கை என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் கொள்கையற்ற கூட்டம்தான் அ.தி.மு.க.
இனி மேலும் பாரதிய ஜனதாவோடு இருந்தால் தமிழக மக்களால் மொத்தமாக புறக்கணிக்கப்படுவோம் என்று பயந்து உள்ளே வெளியே ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பாரதிய ஜனதாவும், அண்ணா பெயரால் கட்சி நடத்தி அதை பா.ஜனதாவிடம் அடகு வைத்த அ.தி.மு.க.வும், வேறு வேறு அல்ல. நாணயமில்லாத நாணயத்தின் இரு பக்கங்கள்.
அரசியல் எதிரிகள் மீது மட்டுமல்ல ஊடகவியலாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் என எல்லோர் மீதும் பா.ஜனதா அத்துமீறல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட சோசியல் வைரசைத்தான் நாம் துணிவோடு எதிர்த்து நிற்கிறோம். மிசா, தடா, பொடா எல்லாவற்றையும் பார்த்தாச்சு. மிரட்டல், உருட்டல் இதெல்லாம் நம்மை ஒன்றும் செய்யாது. பொய் மூட்டைகளையும் அவதூறுகளையும் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
ஹிட்லருக்கு ஒரே ஒரு கோயபல்ஸ்தான் இருந்தாரு. ஆனால் கோயபல்ஸ் எல்லாம் ஒன்று சேர்ந்து கட்சி ஆரம்பித்தால் எப்படி இருக்குமோ? அப்படித்தான் அந்த கூட்டம் உள்ளது. தம் பிடிச்சி அவர்கள் ஊதும் பொய் பலூனை உண்மை என்கிற ஊசியை வைத்து நாம் உடைத்து விடுவோம் என்கிற எரிச்சல் அவர்களுக்கு உள்ளது. பொய்களுக்கு பொய்கள் எப்போதுமே பதில் ஆகாது.
போலியான பெருமைகள் நமக்கு தேவையில்லை. உண்மையான உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்தால் போதும். நமது செய்திகள் உண்மையானவையாக இருக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியினர் போல போலியானதாக இருக்கக் கூடாது. அவர்களுக்கு இப்போது ஒரே வேலை தான். எனது மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோவிலுக்கு போகிறார்னு பார்க்கிறார்கள்.
அதை போட்டோ எடுத்து கோவிலுக்கு போகிறார் என பரப்புகிறார்கள். தமிழகத்தில் உள்ள எல்லா கோவிலுக்கும்தான் அவர் போய்க் கொண்டிருக்கிறார். அது அவரது விருப்பம்.
அதனை நான் தடுக்க விரும்பவில்லை. தடுக்கவும் தேவையில்லை. நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரியே தவிர, ஆன்மிகத்துக்கு எதிரி இல்லை. கோவிலும் பக்தியும் அவரவர் உரிமை. அவரவர் விருப்பம். ஏராளமான போராட்டங்களை நடத்தி கோவில் வழிபாட்டு உரிமையை வாங்கி கொடுத்தது திராவிட இயக்கம்.
கலைஞரின் பராசக்தி வசனம்தான் அவர்களுக்கு பதில். கோவில்கள் கூடாது என்பது அல்ல. கோவில்கள் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது.
கோவிலையும், பக்தியையும் பாரதிய ஜனதா தனது அரசியலுக்கு பயன்படுத்த நினைக்கிறது. கோவில்களை இடித்துவிட்டதாக வாட்ஸ்அப்பில் பூகம்ப படங்களை போட்டு வதந்தி பரப்புகிறார்கள். 1000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திய ஆட்சிதான் நமது ஆட்சி. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்களை மீட்ட ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. அதனை புத்தகமாகவே அச்சிட்டு வெளியிட்டிருக்கிறோம். இதெல்லாம் அவர்களுக்கு பிடிக்கவில்லை.
லைட் எரிந்தால் திருடனுக்குத்தான் பிடிக்காது. கோவிலை பராமரிப்பது மதவெறியை தூண்டி குளிர்காய நினைக்கும் அந்த கும்பலுக்கு பிடிக்கவில்லை. அதனால் உண்மைகளை தொடர்ந்து மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்.
இந்தியா முழுவதும் அதனை எடுத்துச் சொல்வோம். இது தொடர்பாக நான் பேசிய பேச்சுக்கள் 2 பகுதியாக வந்துள்ளது. 20 லட்சம் பேர் அதனை பார்த்துள்ளனர். இது எத்தனை மாநாடுகளுக்கு சமம் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இப்படி நமது கருத்துக்கள் அனைவரையும் சென்றடைய சமூக வலைதளங்களில் நாம் அதிகம் கவனம் செலுத்துவோம்.
இந்த சந்திப்பை ஏற்பாடு செய்த ஐ.டி.பிரிவு செயலாளர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் துணையாக இருப்பவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு வெளியிடப்பட்டுள்ள 'கலைஞர் 100' புத்தகத்தை படித்து அதன் மூலமாக எதிரிகளுக்கு பதிலடி கொடுங்கள். நாற்பதும் நமதே நாடும் நமதே.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.