தமிழ்நாடு

கருணைமிகு தாய், தூணாக விளங்கும் மனைவி தன்னம்பிக்கை கொண்ட மகள்: மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்

Published On 2023-09-15 09:35 GMT   |   Update On 2023-09-15 09:35 GMT
  • கருணைமிகு தாய்-தூணாக விளங்கும் மனைவி-தன்னம்பிக்கை கொண்ட என்னுடைய மகள் இந்த மூன்றும் எனக்கு கிடைத்திருக்கிறது.
  • உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சமூகத்தில் உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரமாக வழங்குகின்ற தொகை.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

என்னுடைய அரசியல் வாழ்க்கையில் சிறு சிறு சம்பவங்களைகூட துவக்க காலத்தில் என் அம்மாவிடம் சொல்லித்தான், தலைவர் கலைஞரிடம் சொல்லச் சொல்வேன். இன்றைக்கு அவர் வயது முதிர்ந்த நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறார். நான் சென்று பார்க்கின்ற போது என் அம்மா முகத்தில் ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு இணையானது வேறு எதுவும் கிடையாது.

அதேபோலதான் என்னுடைய மனைவி துர்காவும். என்னுடைய பாதி என்று சொல்கின்ற அளவுக்கு என்கூட இருக்கிறார். திருமணமாகி ஐந்தாவது மாதத்தில் மிசாவில் நான் கைது செய்யப்பட்டு, ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டேன். என் மனைவி அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர் இல்லை. முதலில் அவருக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. அப்புறம் பொதுவாழ்க்கையில் இதெல்லாம் சகஜம், இயல்பு என்று புரிந்து தன்னை பக்குவப்படுத்திக் கொண்டார். என் வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள்! எல்லாவற்றிலும் எனக்கு உற்ற துணையாக, உறுதுணையாக இருந்து என்னுடைய மிகப்பெரிய சக்தியாக இருப்பது என்னுடைய மனைவி துர்கா தான்.

அடுத்து, என்னோட மகள் செந்தாமரை. அவரை அன்பின் வடிவம் என்று தான் சொல்லமுடியும். நான் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், தான் உண்டு, தன்னுடைய வேலைகள் உண்டு என்று அவர் இருப்பார். ஒரு அரசியல்வாதியினுடைய மகள் என்ற சாயல் தன் மேல் விழுந்துவிடக்கூடாது என்று உன்னிப்பாக அதில் உஷாராக இருப்பார். சுயமாக வளர வேண்டும் என்று நினைப்பார். அந்த வகையில் நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்.

கருணைமிகு தாய்-தூணாக விளங்கும் மனைவி-தன்னம்பிக்கை கொண்ட என்னுடைய மகள் இந்த மூன்றும் எனக்கு கிடைத்திருக்கிறது. இதே மாதிரியான பேரூள்ளம் கொண்டவர்கள்தான் நீங்கள் எல்லோரும்! மகளிர் அனைவரும்! இத்தகைய மகளிரின் நலம் காத்த மாண்பாளர் என்றால் நம்முடைய தலைவர் கலைஞர்தான்.

* பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தந்தார்.

* தலைவர் கலைஞர் அளித்த பணியிடங்களில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீட்டை, இப்போது 40 விழுக்காடு ஆக்கியிருக்கிறோம்.

* உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.

இன்றைக்கு அது 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டு, அதற்கும் மேலாக பெண்கள் இப்போது மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, ஒன்றிய தேர்தல்களில் வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

* ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கினார்.

* ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு முதலில் பள்ளிக்கல்வி வரை இலவசக் கல்வியும், அதன் பிறகு கல்லூரி கல்வி வரை இலவசக் கல்வியும் வழங்கினார்.

* ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களாக, மகளிரை நியமித்தார்.

* டாக்டர் முத்துலட்சுமி நினைவு மகப்பேறு உதவித் திட்டம்.

* மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில் நினைவு திருமண உதவித் திட்டம்.

* டாக்டர் தருமாம்பாள் நினைவு கைம்பெண் மறுமணத் திட்டம்.

* அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித்திட்டம்.

*ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழைக் கைம் பெண்களின் மகள்களுக்கான திருமண உதவித்திட்டம்.

இப்படி எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து மகளிர் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்தவர்தான் நம்முடைய தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவருடைய பெயரில் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுவது என்பது மிக, மிக, மிகப் பொருத்தமானது. அதுவும் அவருடைய நூற்றாண்டில் இது தொடங்கப்பட்டிருக்கிறது.

தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-தமிழினத் தலைவர் கலைஞர் ஆகிய மூவரும் வகுத்துத் தந்த பாதையில் செயல்படுகின்ற அரசுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு. மகளிருக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறது.

விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் சுழல்நிதி கடனுதவிகள் என்று மகளிருக்காக ஏராளமான திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.

இது எல்லாவற்றிக்கும் மகுடம் சூட்டக்கூடிய வகையில்தான் இந்தத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு இனி மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இது உங்களுக்கான உதவித் தொகை இல்லை, உங்களுடைய உரிமைத் தொகை! மீண்டும், மீண்டும் சொல்லுகிறேன். இது உதவித் தொகை இல்லை, உங்களுடைய உரிமைத் தொகை!

உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சமூகத்தில் உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரமாக வழங்குகின்ற தொகை. தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய முதியோர் ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஓய்வூதியம், கைம்பெண் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களில் ஏற்கனவே பயன்பெற்று வரும் 39 லட்சத்து 14 ஆயிரத்து 81 பயனாளிகளுக்கு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் பெற்று வந்த மாத ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து ஆயிரத்து இருநூறு ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டிருக்கிறேன். இதற்காக, கூடுதலாக 940 கோடி ரூபாய் நிதியை நமது அரசு ஒதுக்கியிருக்கிறது. மொத்தத்தில் பார்த்தால், இன்று மகளிர் உரிமைத் தொகையை பெறும் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டும் அல்லாமல், உயர்த்தி வழங்கப்படும் ஓய்வூதியம் பெறும் 39 லட்சம் பேரையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், மொத்தத்தில் ஒரு கோடியே 45 லட்சம் குடும்பங்கள் தமிழ்நாடு அரசினுடைய மாத ஓய்வூதியத் திட்டங்களால் பயன் பெற்று வருகிறார்கள்.

நாம் கொண்டு வந்த திட்டங்களை இன்றைக்கு இந்தியாவே உன்னிப்பாக கவனிக்கிறது. மற்ற மாநிலங்கள் பின்பற்றத் துடிக்குது. இந்தியா கூட்டணிக் கூட்டங்களுக்கு நான் மற்ற மாநிலங்களுக்கு போகும் போது அங்கே வரக்கூடிய அரசியல் தலைவர்களும், பிற மாநிலத்தினுடைய முதலமைச்சர்களும் சந்திக்கின்ற போது நம்முடைய அரசு கொண்டு வருகின்ற திட்டங்களைப் பற்றி ஆர்வமாக கேட்கிறார்கள். விசாரிக்கிறார்கள். தங்களுடைய மாநிலத்தில் செயல்படுத்துவதற்கு நினைக்கிறார்கள்.

கடந்த வாரம் ஜி-20 நாடுகளின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அதை முன்னிட்டு இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் ஒரு சிறப்பு விருந்து கொடுத்தார். அதில் நானும் கலந்து கொண்டேன். அப்போது, சில ஒன்றிய அமைச்சர்கள் கூட நமது சிறப்புத் திட்டங்கள் பற்றி விசாரித்தார்கள். இவை எல்லாம் ஏதோ எனக்கு தனிப்பட்ட கிடைத்திருக்கக் கூடிய பாராட்டுக்களாக நான் கருதவில்லை. தமிழ்நாடு அரசுக்கும், நம்முடைய மக்களுக்கும் கிடைத்திருக்கக்கூடிய பாராட்டுகளாகத்தான் நான் கருதுகிறேன்!

பசிப்பிணியும் போக்கி வருகிறோம் அறிவுப்பசியையும் தணித்து வருகிறோம். இன்னார் படிக்க வேண்டும், இன்னார் படிக்கக் கூடாது என்கின்ற நிலையை மாற்றி, இன்னார் உயரவேண்டும், இன்னார் உயரக் கூடாது என்கின்ற நிலையை மாற்றி, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வழிவகை செய்கின்ற திராவிட மாடல் ஆட்சி, கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கலைஞர் பெயரில் உரிமைத் தொகை மூலமாக வழங்கிக் கொண்டு வருகிறோம். பெண்களுக்கு சமூக- பொருளாதார- அரசியல் வலிமையை வழங்குவது.

உங்கள் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சி இது. உங்கள் கவலைகளைப் போக்கும் ஆட்சி இது.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags:    

Similar News