முக்கிய குற்றவாளி முபினின் நெருங்கிய கூட்டாளிகள் 15 பேரை பிடிக்க வேட்டை- தமிழகம் முழுவதும் போலீசார் விசாரணை
- கோவையில் குண்டு வெடிப்பு போன்ற சதி திட்டத்தை நடத்தும் எண்ணத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலருடன் முபின் நெருங்கிய தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- முபின் பயன்படுத்திய செல்போன் நம்பரை வைத்து இது தொடர்பாக போலீசார் துப்பு துலக்கி இருக்கிறார்கள்.
சென்னை:
கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு ஒரு வாரமாகியும் அடங்காமலேயே உள்ளது.
காரில் இருந்த சிலிண்டர்கள், வெடி மருந்துகள் ஆகியவை வெடித்து சிதறியதால் காரை ஓட்டிச் சென்ற ஜமேசா முபின் பலியானான். கோவையில் மிகப்பெரிய சதி திட்டத்தை அரங்கேற்றும் நோக்கத்தில் முபின் செயல்பட்டிருப்பது அம்பலமானது.
இதைத் தொடர்ந்து முபினின் வீட்டில் சோதனை செய்த போலீசார் 75 கிலோ வெடிமருந்துகளை கைப்பற்றினர். இந்த வெடி மருந்துகளை பயன்படுத்தி கோவையில் 3 இடங்களில் குண்டு வைப்பதற்கு முபினும் அவனது கூட்டாளிகளும் திட்டமிட்டது வெட்டவெளிச்சமானது.
இது தொடர்பாக முபினின் கூட்டாளிகளான முகமது தல்சா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 6-வதாக முபினின் நெருங்கிய உறவினறான அப்சர்கான் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முதலில் கைதான 5 பேரை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல்வேறு தகவல்கள் போலீசுக்கு கிடைத்துள்ளன. போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் கோவையை தாண்டி வெளி மாவட்டங்களிலும் முபின் பலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நெல்லை மாவட்டம் ஏர்வாடி மற்றும் கடலூர் பரங்கிப்பேட்டையில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு என்.ஐ.ஏ.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும் தமிழக போலீசாரும் தங்களுக்கு தெரிந்த தகவல்களின் அடிப்படையில் பலரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் 15 பேர் வரை முபினின் நெருங்கிய கூட்டாளிகளாக செயல்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்படும் இந்த 15 பேரையும் பிடிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகளுடன் சேர்ந்து மாநில போலீசாரும் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவையில் குண்டு வெடிப்பு போன்ற சதி திட்டத்தை நடத்தும் எண்ணத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலருடன் முபின் நெருங்கிய தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முபின் பயன்படுத்திய செல்போன் நம்பரை வைத்து இது தொடர்பாக போலீசார் துப்பு துலக்கி இருக்கிறார்கள்.
அந்த வகையில் முபினுக்கு பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்திருப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதில் ஒருசிலர் பண உதவி களையும் பொருள் உதவிகளையும் செய்திருக்கிறார்கள்.
இது போன்று பல வழிகளில் சதி திட்டத்துக்கு உதவிகரமாக முபினின் கூட்டாளிகள் 15 பேரும் செயல்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதைத் தொடர்ந்தே அவர்களை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ள 6 பேரிடமும் கோவை மாநகர போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.க்கு மாற்றப்பட்டு விசாரணை சூடு பிடித்துள்ள நிலையில் இனி தமிழக காவல்துறையிடம் முபினின் கூட்டாளிகள் யாராவது சிக்கினால் அவர்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய விசாரணை நடத்தி மேல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவார்கள்.
இப்படி என்.ஐ.ஏ. விசாரணையும், தமிழக காவல்துறை விசாரணையும் தீவிரமாகி இருப்பதால் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் மேலும் அடுத்தடுத்து பரபரப்பான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.