தமிழ்நாடு

சென்னையில் 3 இடங்களில் மேம்பாலம் அமைக்க டெண்டர்- ககன்தீப் சிங் பேடி தகவல்

Published On 2022-07-16 08:57 GMT   |   Update On 2022-07-16 08:57 GMT
  • போக்கு வரத்து நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
  • போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகரை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தங்குதடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கிலும், வருங்கால போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையிலும் மாநகரின் முக்கிய மற்றும் போக்கு வரத்து நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ரூ.73.84 கோடி மதிப்பில் புதியதாக 3 மேம்பாலம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-41, மணலி சாலையில் ரெயில்வே சந்திக்கடவு குறுக்கே, வடிவமைப்பு, பொறியியல் கொள்முதல் மற்றும் கட்டுமானம் முறையில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அண்ணா நகர் மண்டலம், வார்டு-98, ஓட்டேரி நல்லாவின் குறுக்கே ஆஸ்பிரன் கார்டன் 2-வது தெரு மற்றும் கீழ்பாக்கம் தோட்டம் தெரு இணைத்து அமைந்துள்ள பாலத்தை இடித்துவிட்டு புதியதாக பாலம் அமைக்கும் பணி மற்றும் ஆலந்தூர் மண்டலம், வார்டு-161ல் ஆதம்பாக்கம் ஏரிக்கால்வாயின் குறுக்கே ஜீவன் நகர் 2-வது தெரு மற்றும் மேடவாக்கம் பிரதான சாலையை இணைத்து பாலம் அமைக்கும் பணிக்கு ஒப்பம் கோரப்பட்டுள்ளது.

இப்பணிகள் முடிவுற்றால் மாநகரின் மேற் குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News